குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஐஸ்கிரீம் என்றால் பிடிக்கும்தான். ஆனால், அதை சாப்பிட நினைக்கும்போதே உடல்நிலையைப் பற்றிய அக்கறையும் சேர்ந்தே வரும். ஐஸ்கிரீம் சாப்பிட்டால் காய்ச்சல் வருமோ, இருமல் வருமோ என்ற அச்சமும் இருக்கும். ஆனால், தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் படுகிற ஐஸ்கிரீம்களை சாப்பிடும்போது உடல்நிலை சார்ந்து யோசிப்பதை தவிர்க்கலாம். ஆமாம், சுத்தமான பிரீமியம்
பிராடக்ட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் சாதாரண ஐஸ்கிரீம்களைப் போல் இல்லாமல் குரலுக்கும் உடலுக்கும் எந்த மாதிரியான தொல்லையும் தராமல் அதே நேரத்தில் சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட முதல்தர ஐஸ்கிரீம்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது மட்டுமில்லாமல் அந்த ஐஸ்கிரீம்களை பலவகையான ஃப்ளேவர்களில் கொடுத்து வருகிறது ராயபுரம் எம்.எஸ்.கோயில் தெருவில் இருக்கிற ‘ஸ்கூப்ஸ் அண்ட் சேக்ஸ்’ என்கிறஐஸ்கிரீம் கடை.சொந்தவூர் காரைக்கால்தான். ஆனால், வேலைக்காக சென்னை வந்து இங்கேயே செட்டில் ஆகிவிட்டேன் என்கிறார் ஐஸ்கிரீம் ஷாப்பின் உரிமையாளர் சக்திவேல்.கல்லூரி முடித்தபிறகு வெளிநாட்டில் வேலை. ஊருக்குத் திரும்பிய பிறகு சொந்தமாக ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்ற ஆசை இருந்தது. எனது மகனுக்கு ஹோட்டல் வைக்க வேண்டும் என்கிற ஆசை. அதனால் ஹோட்டல் வைக்கலாம் என முடிவெடுத்தோம். ஹோட்டல் தொழிலில் முன்பின் அனுபவம் இல்லை.
பலதரப்பட்ட உணவுகள் நிறைய நபர்கள் உணவு சார்ந்த தயாரிப்பு என அனைத்துமே புதிதாக இருக்கும். அதே சமயம், உணவகத்தை நிர்வாகிப்பதிலும் அவ்வளவாக அனுபவம் இல்லை என்பதால் முதலில் சிறியதாக ஐஸ்கிரீம் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தோன்றியது. அதனால், இந்த கடையை இரண்டு வருடங்களுக்கு முன்பாக தொடங்கினேன் என்கிறார் சக்திவேல்.எந்த வேலைப் பார்த்தாலும் அதில் எனது வேலை தனியாக தெரிய வேண்டுமென நினைப்பேன். எல்லா இடத்திலும்தான் ஐஸ்கிரீம் கடைகள் இருக்கின்றன. ஆனால், நமது கடைக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வருபவர்களுக்கு ஸ்பெஷலாக என்ன கொடுக்கலாம் என யோசித்தேன். அதே நேரத்தில் நமது கடைக்கு சாப்பிட வருபவர்களுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு உடல்நிலை சரியில்லாமல் ஆகக்கூடாது என நினைத்தேன். ஐஸ்கிரீமைப் பொருத்தவரை பல இடங்களில் ஃப்ளேவர் பவுடர்களும், சாஸ் கிரீம்களும் சேர்த்துதான் தயாரிக்கின்றனர். குளிர்ச்சியாக ஏதோ ஒன்றைக் கொடுத்தாலும்கூட ஐஸ்கிரீம் என நம்பிவிடும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் எனது கடை ஐஸ்கிரீம் மட்டும் தனியாக தெரிய வேண்டுமென நினைத்தேன். அதனால், முதல் தரம் வாய்ந்த ஐஸ்கிரீம் எங்கு இருக்கிறது எனத் தேடி அங்கிருந்து ஐஸ்கிரீம்களை வரவைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறேன்.
நமது கடைக்கு மட்டும் 25 வகையான ஐஸ்கிரீம்கள் வருகின்றன. எல்லா ஃப்ளேவருமே ஒரிஜினல். மேங்கோ, பெல்ஜியம் சாக்கோ, ஸ்ட்ராபெரி, ரோஸ், பிங் கோவா, மின்ட் சாக்லேட், மலாய் குல்பி என இன்னும் பல ஃப்ளேவர்களில் அசலான ஐஸ்கிரீம்கள் கிடைக்கின்றன. ஐஸ்கிரீம்களோடு சேர்ந்து ப்ரவ்னி, ஐஸ்கிரீம் சேக், பலூடா, கோன் ஐஸ்கிரீம்ஸ் என இன்னும் பல வெரைட்டிகள் கொடுக்கிறோம். ப்ரவ்னியில் சிஜ்லிங் ப்ரவ்னி, பிரோகிஸ் ப்ரவ்னி, பென்டோ கிட்கார் ப்ரவ்னி என பல வகையில் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் எந்த ஃப்ளேவரில் பலூடா ஆர்டர் செய்கிறார்களோ அந்த ப்ளேவரில் அனைத்து வகையான நட்ஸும் சேர்த்து மிக்ஸ் செய்து புதிதாக பலூடாவும் கொடுப்போம். அதிலும் ராயல் பலூடா, சாக்லேட் பலூடா, ஸ்ட்ராபெரி பலூடா, ட்ரை புரூட் பலூடா, குலோப் ஜாமூன் பலூடா என வகைகள் இருக்கின்றது. பலவிதமான ஐஸ்கிரீம்ஸ் ஷேக் இருக்கின்றது. அதில், ஐஸ்கிரீம் சாக்கோ, பூமர் புர்ஸ்ட், கேரமல் கிரீம், சாக்கோ ஸ்ட்ராபெரி என இன்னும் பலவிதமான ஐஸ்கிரீம் இருக்கின்றது. பெல்ஜியம் ஸ்டைல் வாஃபிள்ஸ் பல வெரைடிகளில் கிடைக்கிறது. ஓரியோ அண்ட் கிரீம் வாஃபிள்ஸ், கிளாசிக் கேரமல் வாஃபிள்ஸ், பீனட் ஓவர்லோட் வாஃபிள்ஸ், கிட்காட், சாக்கோ, ஹனி, மேங்கோ என குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் கொடுத்துவருகிறோம். நமது கடையில் இன்னொரு ஸ்பெஷல் என்றால் அது ஐஸ்கிரீம் தாளிதான். ஆமாம், நமது கடையில் 25 வகையான ஃப்ளேவரில் ஐஸ்கிரீம் இருக்கிறது.
அதிலிருந்து வாடிக்கையாளர்கள் எந்த மாதிரியான ஐஸ்கிரீம் கேட்கிறார்களோ அதில் எட்டு ஐஸ்கிரீம் வைத்து ஒரே தட்டில் வெவ்வேறு கிண்ணத்தில் வைத்து சேல்ஸ் செய்கிறோம். ஐஸ்கிரீமில் தாளி கொண்டுவந்தது ரொம்ப புதியது. குடும்பத்தோடு எங்கள் கடைக்கு சாப்பிட வருபவர்கள் ஒரு ஐஸ்கிரீம் தாளியை வாங்கிவிட்டு மொத்தமாக சேர்ந்து சாப்பிடுகிறார்கள். அதேபோல, ஐஸ்கிரீமில் புட்டு மாதிரி செய்து கொடுக்கிறோம். அதாவது, ஒரு குழாயில் பல ஐஸ்கிரீம்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து பிரீஸ் செய்து அதை மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறோம். பார்ப்பதற்கு புதிதாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்கிற இந்த புட்டு ஐஸ்கிரீம் பலரின் பேவரைட் ஐஸ்கிரீம். கோன் வித் ஐஸ்கிரீம் என ஒரு ஐஸ்கிரீம் இருக்கிறது. குழந்தைகளுக்குப் பிடித்த ஐஸ்கிரீம்களில் இதுவும் ஒன்று. நமது கடைக்கு வருகிற வாடிக்கையாளர்கள் எப்போதும் எனக்கு ஸ்பெஷல்தான். ஏனெனில், குடும்பத்தோடு சாப்பிடுவதற்காக எங்களது கடைக்குவந்து மொத்தமாக அமர்ந்து ஒரு ஐஸ்கிரீமை சாப்பிடுவதே ரொம்ப பிடித்த விசயமாக இருக்கிறது. அந்த வகையில் எனது கஸ்டமர்ஸ் எனக்கு ஸ்பெஷல். அதேபோல, நிறைய பள்ளி, கல்லூரி மாணவர்களும் சாப்பிடுவதற்கு வருகிறார்கள்.
அதேபோல, கொரியனில் பி.டி.எஸ் என்கிற உலகறிந்த இசைக்குழு இருக்கிறது. உலகம் முழுவதுமே அந்த இசைக்குழு பேமஸ். அந்த வகையில் நமது தமிழ்நாட்டிலும்கூட நிறைய குழந்தைகள் பி.டி.எஸ் இசைக்குழுவின் பாடல்களை பாடுகிறார்கள். அவர்களுக்கு ஸ்பெஷலாக எனது கடையில் பி.டி.எஸ்ஸின் ஏதாவது ஒரு பாடலை பாடுபவர்களுக்கு இலவசமாக ஐஸ்கிரீமும் கொடுக்கிறோம். ஐஸ்கிரீமைப் பொருத்தவரை எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான ஐஸ்கிரீம் கிடைப்பதில்லை. அதனால், எந்த மாதிரியான ஐஸ்கிரீம் எங்கு ஸ்பெஷலாக இருக்குமோ அங்கிருந்து ஐஸ்கிரீம் வரவைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறோம். ஒவ்வொரு ஐஸ்கிரீமிற்கு மேலும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நட்ஸ் அண்ட் சாக்லேட் சேர்த்து கொடுக்கப்படுகிறது. எங்கள் கடை இருக்கும் பகுதியில் பெரும்பாலும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு தனியான ஸ்பாட் கிடையாது. அதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எங்கள் கடையைத் தேடி வருகிறார்கள். அவர்களுக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் தரமான ஆரோக்கியமான ஐஸ்கிரீம்களை கொடுத்துவருகிறோம். அடுத்தபடியாக நாங்களே சொந்தமாக ஐஸ்கிரீம் தயாரித்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கலாம் என நினைத்திருக்கிறோம் என மகிழ்ச்சியோடு கூறி முடித்தார் சக்திவேல்.
ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட்பால்