புதுடெல்லி: மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்கள் பற்றிய அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி 13வது மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் வரும் செப். 30ம் தேதி துவங்கி, நவ. 2ம் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. இப்போட்டிகள் நடைபெறும் இடங்கள் பற்றிய அறிவிப்பை ஐசிசி நேற்று வெளியிட்டது.
அதன்படி, இப்போட்டிகள், பெங்களூரு, கவுகாத்தி, இந்துார், விசாகப்பட்டினம் ஆகிய இந்திய நகரங்களிலும், இலங்கையின் கொழும்புவிலும் நடைபெற உள்ளன. முதல் போட்டி, வரும் செப். 30ம் தேதி பெங்களூருவில் நடக்கும். இப்போட்டியில் இந்தியா விளையாடும். பாக். ஆடும் போட்டிகள் கொழும்பு நகரில் நடக்கும். பாக். அரை இறுதிக்கு தகுதி பெற்றால், அப்போட்டி கொழும்புவிலும், இல்லாவிடில் கவுகாத்தியிலும் அக். 29ம் தேதி நடைபெறும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி பெங்களூருவில் அக். 30ம் தேதி நடைபெறும். இறுதிப் போட்டியில் பாக். ஆடினால் கொழும்புவிலும், இல்லாவிடில் பெங்களூருவிலும் நவ. 2ம் தேதி நடக்கும் என ஐசிசி கூறியுள்ளது.