மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட 2 வார சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் கிளை அமர்வு உத்தரவிட்டது. நெல்லை பழையபேட்டையைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர் அதிகாரிகள் மீது ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அப்போதைய பள்ளி கல்வித்துறை செயலரான ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்வி இயக்குநர் முத்து பழனிச்சாமி, பயிற்சி மைய முதல்வர் பூபால ஆண்டோ ஆகியோருக்கு 2 வார சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஆக. 9ம் தேதிக்குள் பதிவாளர் (நீதித்துறை) முன் சரணடையே உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன், ரவீந்திரன், அரசு கூடுதல் பிளீடர் சாதிக்ராஜா ஆகியோர் ஆஜராகி, ‘‘நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டு அதற்குரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், காலதாமதத்தை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது. இதற்காக வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். தண்டனை வழங்கிய உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தண்டனை வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து விசாரணையை தள்ளி வைத்தனர்.