சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் நேற்று பாஜவில் இணைந்தார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது துணை தலைவர்கள் சவேரா சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உடனிருந்தனர்.
பாஜவில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தகவல் ஆணையம் தலைமை ஆணையர், ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆலோசகர் என பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார். இதேபோல, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 15 மருத்துவர்கள் தங்களை பாஜவில் நேற்று இணைத்துக்கொண்டனர். அப்போது, மாநில செயலாளர்கள் எஸ்.சதீஷ்குமார், வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‘‘பாஜவை பொறுத்தவரை அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். தமிழக பாஜவை பொறுத்தவரை யாராக இருந்தாலும் தாய்மொழி பெரியது. அடுத்தவர்களின் மொழி பற்றி யாரும் தவறாக பேசக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். பாமகவின் உட்கட்சி பிரச்னைகள் குறித்து கருத்து கூற முடியாது. நெல் கொள்முதலில் விவசாயிகளுக்கு சேர வேண்டிய சுமார் ரூ.600 கோடிக்கு மேல் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக அந்த பணத்தை விவசாயிகளுக்கு விடுவிக்க வேண்டும்” என்றார்.