சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட 7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு அரசு 7வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையம் பல்வேறு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கிடும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட வகையில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில், அலுவலர் சாரா உறுப்பினராக திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்பட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின், அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் நிதி நிலையை ஆய்வு செய்து, பிற இனங்களுடன் பரிந்துரைக்கும்.
அதன்படி மாநில அரசு விதிக்கத்தக்க வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் நிகர வருவாயை மாநில அரசுக்கும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளுதல், மேலும், அத்தகைய வருவாயில் மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே அவற்றிற்குரிய பங்குகளை முறையே பிரித்தளித்தல், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய அல்லது அவைகளே தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வரிகள்,
தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றை தீர்மானித்தல் மற்றும் மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவி மானியங்கள், 2027ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தொடங்கும் ஐந்தாண்டுகளுக்கு பொருந்தும் வகையில், இந்த ஆணையம், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 31ம் தேதிக்குள் தனது அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு அளித்திடும். இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.