கோவை: கோவை பீளமேட்டில் பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ நிருபர்களுக்கு நேற்று கூறியதாவது:
தமிழகம், கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் நீண்ட காலமாக கல்வி கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் கல்வி சிறப்பாக இருக்கிறதா என்பதை தமிழகத்தை கொண்டு போய் பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் ரொம்ப காலமாக பின்தங்கிய மாநிலம். நமது மாநிலத்தை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும். தமிழ், மலையாளம், கன்னடம் உட்பட பிற மொழிகளுக்கு ரூ.240 கோடியும், சமஸ்கிருதத்திற்கு ரூ.2,400 கோடியும் ஒதுக்கி இருப்பது பாகுபாடு கிடையாது.
திராவிடம் என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு என நாங்கள் நம்புகின்றோம். இங்கு வாழக்கூடிய மக்கள் திராவிடர்கள். நான் திராவிடர்தான். இதில் என்ன சந்தேகம்? இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய அனைவரும் திராவிடர்கள்தான். கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைவரும் திராவிடர்கள்தான். பாஜ, அதிமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. அதிமுக தலைமையில்தான் கூட்டணி என எங்கள் தலைவர்கள் உறுதியாக சொல்லி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.