
சிவகங்கை: ஒன்றிய அரசின் நல்ல திட்டங்களை ஆதரிப்பேன். பாஜவுடன் கூட்டணியே வைக்க மாட்டேன் என்று கூறவில்லை என டிடிவி.தினகரன் தெரிவித்து உள்ளார். சிவகங்கை அருகே தமராக்கியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கட்சி நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: லண்டனில் எனக்கு சொத்து இருப்பதாக கூறும் எடப்பாடியின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எடப்பாடி பழனிசாமி பதற்றத்தில் பிதற்றுகிறார். எனக்கு லண்டனில் சொத்து இருந்தால் நானே அரசிடம் ஒப்படைத்து விடுவேன். கூட்டணி குறித்து இந்த ஆண்டு இறுதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும்.
பாஜவுடன் கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் என்பது ஏற்கனவே தெரிவித்த கருத்து தான். அந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டை பாதிக்க கூடிய திட்டங்களை குறிப்பாக ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் எதிர்த்த திட்டங்களை கொண்டு வந்ததால் ஆளும் பாஜ அரசிற்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், இனி வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் கூட்டணி இல்லை என தெரிவிக்கவில்லை.
அண்மையில் நிலக்கரி ஆய்வறிக்கை வெளியிட்ட பிறகு எதிர்ப்பு தெரிவித்தோம். மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தால் எதிர்ப்பதும், நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது ஆதரிப்பதும் இயல்பு. ஓபிஎஸ் மாநாட்டிற்கு பின் என்ன விளைவு ஏற்படும் என பொறுத்திருந்து பார்ப்போம். ராகுல் காந்தி மீது அவரது ஆதரவுடன் கொண்டு வந்த சட்டமே பாய்ந்துள்ளது. நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. நீதிமன்றத்தில் அரசின் தலையீடு இருக்க வாய்ப்பில்லை.இவ்வாறு தெரிவித்தார்.
- முறைகேடுகளால் எடப்பாடி ஆட்சியை இழந்தார்
மானாமதுரையில் டிடிவி.தினகரன் கூறுகையில், ‘‘திருச்சி மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு உண்டா என்பது குறித்து ஓபிஎஸ்சிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும். எடப்பாடி நான்கு ஆண்டுகளில் செய்த முறைகேடுகளால் தான் திமுகவிடம் ஆட்சி பொறுப்பை இழந்துள்ளார். அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் என் மீது திசை திருப்பும் நோக்கத்தில் பேசி வருகிறார்’’ என்றார்.