புனே: தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை என்றும் துணை முதல்வர் அஜித் பவார் தங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்தான் என்றும் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியதாக தகவல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நான் அவ்வாறு கூறவே இல்லை என சரத்பவார் மறுப்பு தெரிவித்துள்ளார். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகிய அஜித் பவார் மகாராஷ்டிராவில் சிவசேனா- பாஜ கூட்டணி அரசில் துணை முதல்வராக உள்ளார். அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சரத் பவாரின் மகளும் பராமதி தொகுதி எம்.பி.யும், கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை என்றும் அஜித் பவார் கட்சியின் எம்எல்ஏ. அஜித் பவார் அரசியலில் வேறுபட்ட நிலையை எடுத்துள்ளார். இது பற்றி சபாநாயகரிடம் புகார் செய்துள்ளோம். என்றும் நேற்றுமுன்தினம் கூறினார். இதுபற்றி சரத் பவாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரத்பவார் கூறியது. சுப்ரியா கூறியது உண்மைதான். இதில் சந்தேகம் இல்லை. கட்சி பிளவு படவில்லை. அஜித் பவார் எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்தான்.
சிலர் அரசியலில் வேறு பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். ஜனநாயகத்தில் இது சகஜம். அதை பிளவு என்று கூற முடியாது. பிளவு என்றால் கட்சியின் தேசியமட்டத்தில் பிளவு ஏற்பட்டால்தான் அது பிளவாகும். அப்படி எதுவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நடக்கவில்லை. எனவே அதனை கட்சி பிளவு என்று கூற முடியாது. இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சில மணி நேரத்தில் நேற்று மீண்டும் நிருபர்களை சந்தித்து சரத்பவார் கூறியதாவது: அஜித்பவார் எங்கள் கட்சித் தலைவர்தான் என ஒரு போதும் நான் கூறவில்லை. சுப்ரியா சுலேதான் கூறினார்.
அவர் கூறியதாக செய்தித்தாள்களிலும் வந்திருக்கின்றன. இதை இப்போது நான் கூறியதாக எடுத்துக் கொண்டது உங்களுடைய (ஊடகங்களின்) தவறு. அஜித்பவார் எங்கள் கட்சி தலைவர் அல்ல. இதுதான் எனது நிலைப்பாடு. இவ்வாறு சரத்பவார் கூறினார்.