சென்னை: ‘தக் லைப்’ இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்டார். இதில் பேசிய கமல்ஹாசன், ‘‘கன்னட மொழி, தமிழிலிருந்து பிறந்தது’’ என்று சொன்னார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல்ஹாசன் நடித்த ‘தக் லைப்’ திரைப்படத்தை அந்த மாநிலத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் சர்ச்சைகளைக் கிளப்பினர். இருப்பினும் கமல் தான் கூறியது சரி என்று மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். நடிகர் சிவராஜ் குமாரும், தன் மீதுள்ள அன்பின் மிகுதியால் கமல் அப்படி பேசியதாகவும், ‘‘கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்?’’ என்றும் கமலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சிவராஜ் குமார் திரைத்துறையில் 40வது ஆண்டை தொடங்குவதற்கு அவருக்கு கன்னடத்தில் வாழ்த்துத் தெரிவித்துப் பேசியிருக்கிறார் கமல். இதுகுறித்து வீடியோவில் பேசியிருக்கும் கமல், ‘‘சிவராஜ்குமார் எனக்கு ஒரு மகனைப்போல; நான் அவருக்கு சித்தப்பா. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டின அன்பு எதிர்பாராத அன்பு. சிவான்னாவை பொறுத்தவரை இந்த 40 வருஷம். எப்படி ஓடிச்சுன்னு எனக்கு தெரியல. இன்னிக்கு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிற விஷயம். இனியும் சாதிப்பார். இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது’’ என்று வாழ்த்திப் பேசியிருக்கிறார்.