நன்றி குங்குமம் தோழி
‘குடும்பச் சூழ்நிலையை கடந்து, படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் முன்னோக்கிச் செல்வேன்’ என்கிறார் பளுதூக்கும் வீராங்கனை மகா.‘‘சொந்த ஊர் அம்பாசமுத்திரம். எங்க வீட்டில் என்னையும் சேர்த்து மூன்று பிள்ளைகள். அதில் நான்தான் கடைக்குட்டி. அப்பா, அம்மா இருவரும் மரப் பட்டறை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்கள். இதற்காக மரங்களை அப்பா புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெட்டன்விடுதி என்ற ஊரில் இருந்து வாங்கி வருவார். அது பெரும்பாலும் தைல மரங்களாகத்தான் இருக்கும். அந்த மரத்தில் பொருட்களை செதுக்கி அதனை விற்பனை செய்து வந்தார்.
சில சமயம் அப்படியே மரக்கட்டையாக வேண்டும் என்று கேட்பார்கள். அப்படியும் விற்பனை செய்து வந்தார்கள். இதில் பெரிய அளவில் வருமானம் இல்லை என்பதால் எங்க மூவரையும் படிக்க வைக்கவே அப்பா ரொம்ப சிரமப்பட்டார். அப்பாவின் இந்த வேலைக்கு அம்மாவும் அண்ணாவும் உதவி செய்வார்கள். நானும் கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்ததும், இந்த வேலையில் ஈடுபடுவேன். எனக்கு படிப்பு மட்டுமில்லை, விளையாட்டுத் துறையிலும் அதிக ஆர்வம் உண்டு. அப்படித்தான் நான் பளு தூக்கும் விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்தேன். ஆனால் அம்மாவிற்கு அதில் பெரிய அளவில் விருப்பம் இல்லை.
ஆனால் நான் அவரிடம் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று கூறுவேன். ஒவ்வொரு முறை போட்டிக்கு போகும் போது எல்லாம் அம்மாவிடம் கண்டிப்பாக ஜெயிப்பேன் என்று சொல்லிவிட்டுதான் செல்வேன். படிப்பு ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் பளுதூக்குவது, கம்பு ஊன்றி தாண்டுதல், தொடர் ஓட்டம் ஆகிய எந்த அனைத்து விளையாட்டுகளுக்கும் நான் நேரம் ஒதுக்கி வருகிறேன். அதற்கு என் பயிற்சியாளர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்றவர், தான் எடுத்துக் கொண்ட பயிற்சிகள் குறித்து விவரித்தார்.
‘‘பளு தூக்குதல் மேல் ஆர்வம் ஏற்பட நாங்க செய்து வந்த தொழில்தான் காரணம். மரப் பட்டறை வேலையை அம்மா, அப்பா செய்து வருவதால், அவர்களுக்கு உதவியாக அதிக எடையுள்ள மரப் பொருட்களை தூக்கி வைப்பேன். சராசரி பெண் குழந்தைகள் தூக்கும் எடையை விட என்னால் அதிகப்படியான எடையை தூக்க முடிந்தது. அதுதான் ஏன் நான் பளுதூக்கும் விளையாட்டில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தை என் மனதில் விதைத்தது. அதன் பிறகுதான் நான் அந்தப் போட்டிகளில் பங்கு பெற ஆரம்பித்தேன். அதற்கு என் உடற்கல்வி ஆசிரியர் பழனிகுமார்தான் எனக்கு முழு ஊக்கம் கொடுத்தார். எனக்கான பயிற்சியும் அளித்தார்.
ஆனால் வீட்டுச்சூழல் காரணமாக நான் வெளியூரில் நடைபெறும் போட்டிகளை தவிர்ப்பேன். ஆனால் பழனி சார்தான் அதற்கான பயணக் கட்டணம் அனைத்தும் பார்த்துக் கொள்வார். நான் மறுத்தாலும், விளையாட்டில் பெரிய சாதனைப் படைத்தால் உனக்கான ஸ்பான்சர்ஷிப் உன்னை தேடி வரும். அதுவரை என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன் என்பார். அவருக்கும் நான் அடிக்கடி தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதால் என் பெற்றோர் என் செலவுக்கு தரும் பணத்தை நான் சேமித்து வைத்து போட்டியின் கட்டணத்திற்காக பயன்படுத்திக் கொள்வேன்’’ என்றவர், தான் வென்ற போட்டி குறித்து விவரித்தார்.
‘‘பழனி சார் காலை 5 மணிக்கு எல்லாம் பயிற்சியினை ஆரம்பித்திடுவார். உடற்கல்வி குறித்த பயிற்சி மட்டுமில்லாமல் காவல்துறை, ராணுவம் போன்ற வேலைகளுக்கும் பயிற்சிகளை வழங்கி வருகிறார். அவரின் பயிற்சியால் தான் நான் பல போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்று வருகிறேன். 2023ல் திருநெல்வேலி மாவட்ட அளவிலான நடைபெற்ற போட்டியில் ‘ஸ்ட்ராங் வுமன்’ என்ற கேடயத்தைப் பெற்றேன். கேம்பிரிட்ஜ் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம், கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம், அம்பாசமுத்திரம் மாவட்ட அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம், பாபநாசம் திருவள்ளுவர் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் என பல பரிசுகளை வென்றிருக்கிறேன். இந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன்.
மாநில அளவில் 47 மற்றும் 49 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வருகிறேன். சென்ற ஆண்டு வட்டார அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்று மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், போட்டி சென்னையில் நடைபெற்றதால் பொருளாதார சூழ்நிலை நெருக்கடியால் என்னால் அங்கே சென்று பங்கேற்க முடியவில்லை. அதற்கு முன்பு அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியின் போது என் உடல் எடை திடீரென்று குறைந்து விட்டது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற போது, சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
ஆனால் பிரச்னை அதோடு நிற்கவில்லை. மீண்டும் மருத்துவரை சந்தித்தேன், பரிசோதனை செய்தவர், உடனே குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார். இப்படி பல தடைகளை தாண்டித்தான் மீண்டும் நான் என்னுடைய பயிற்சியில் ஈடுபட துவங்கி இருக்கிறேன். அகில இந்திய அளவில் கலந்து கொள்வதற்கு பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். என் சிறிய கோரிக்கை என்னவென்றால், எங்கள் பகுதியில் பெண்களுக்கு என்று தனியாக விளையாட்டுத்துறை சார்பில் உடற்பயிற்சி கூடம் இல்லை. அதனை அமைத்துக் கொடுத்தால் என்னைப் போல் பல பெண்கள் பயிற்சி பெற வசதியாக இருக்கும்’’ என்றார்.
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்