சுற்றுலானு முடிவெடுத்தால் ஒன்று நண்பர்களோடு பயணிப்போம் அல்லது உறவினர்களை இணைத்துப் போவோம். இது இரண்டுமே எனக்கு சரிபடாதுன்னு தோன்றினால், குடும்பத்தினர் மட்டும் போவோம். நம்முடைய சுற்றுலாக்கள் பெரும்பாலும் இப்படியாகத்தான் இருக்கும். ஆனால், இதெல்லாம் தாண்டி சோலோவா டூர் போறதுதான் எனக்குப் பிடித்தமான விஷயம் என நமக்கு பிரமிப்பைக் கொடுத்து பேச ஆரம்பித்தவர் ஸ்டாட்அப் நிறுவனம் ஒன்றின் பெண் தொழில்முனைவோரான ஆஷா.
‘‘நாள் முழுக்க ஓடிக்கிட்டே இருக்கும் நமக்கு ஒரு மணி நேரம் கிடைத்தாலும் நமக்குப் பிடிச்ச மாதிரியே நம்மை ஆசுவாசப்படுத்துவோம் இல்லையா? அதுமாதிரி தான் சோலோ டிராவலும். நம்மையே நாம் தெரிந்துகொள்வதற்கான விஷயங்கள் இதில் ஏராளமாகக் கிடைக்கும். இதுவும் எஞ்சாய்மென்ட்தான்’’ எனப் புன்னகைத்தபடி பேச ஆரம்பித்தார் ஆஷா.
‘‘குடும்பம்… கணவர்… குழந்தைன்னு ஒரு சில நாட்கள் அவர்களைத் தள்ளி வச்சுட்டு பெண்கள் தனியாகப் பயணிப்பதில் மகிழ்ச்சியும்… குதூகலமும் இருக்கத்தான் செய்யும். இது பெண்கள் பலருக்கும் தெரிவதில்லை’’ என்றவர், ‘‘பயணத்தில்தான் நம்மையே நாம் உணர்வதற்கான தருணங்களும் கிடைக்கும். முக்கியமாக இதை நான் பெண்களுக்குதான் சொல்கிறேன். குடும்பத்தோடு பயணிக்கும்போது, வீட்டில் இருப்பது போலவே திரும்பவும் கணவரைக் கவனிப்பது, குழந்தைகளை பார்த்துக்கொள்வது, குழந்தைக்கு டைபர் மாற்றுவதுன்னு வீட்டில் செய்கிற அதே அம்மா வேலையைதான் பயணத்திலும் தொடர்வோம்’’ என்றவர், தன்னுடைய சோலோ யுரோப் பயணத்தை நம்மிடம் அசை போட ஆரம்பித்தார்.
‘‘வழக்கமான வாழ்க்கையில் இருந்து கொஞ்சமாக விலகி, எனக்கே எனக்குன்னு நான் தேர்ந்தெடுத்த பாதைதான் இந்த சோலோ டிராவல். ரேவந்த், இவான் என எனக்கு இரண்டு பிள்ளைகள். இருவரையும் என் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு பயணிக்கலாம் என முடிவெடுத்தபோது, என் கணவரும் என்னைப் புரிந்துகொண்டு, ‘சரி சென்றுவா குழந்தைகளையும், வீட்டையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ எனக் கை கொடுத்தார். அவ்வளவுதான் என் பயணத்திட்டம் தயாரானது.
குடும்பத்தோடு பல பயணங்களை செய்திருந்தாலும் ஒரு முறையாவது வெளிநாட்டுக்கு பயணிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருந்தது. இன்ஸ்டா பக்கத்தில் யுரோப் டிரிப் விளம்பரம் ஒன்று கண்களில் பட, டிராவல் ஏஜென்ஸியிடம் பேசி, அவர்கள் மீது நம்பிக்கை வந்தபிறகு, ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கத் தொடங்கினேன். சுற்றுலாவுக்கான செங்கன் விசா பெறுவதில் தொடங்கி.. ப்ளைட் டிக்கெட், உணவு, தங்குமிடம், பயணத் திட்டங்கள் என எல்லாவற்றையும் பக்காவாக செய்து கொடுத்தார்கள்.
சின்ன வயதில் இருந்தே என் ட்ரீம் டெஸ்டினேஷன் யுரோப்தான். ஈஃபிள் டவரும், ஸ்விட்சர்லாந்தும் என் கனவுகளில் அடிக்கடி வந்து போகக் காரணம் பள்ளிப் பருவத்தில் நான் அதிகம் பார்த்து ரசித்த ஹேடி நாடகம். இந்த டிராமாவை பார்த்து பார்த்து ஸ்விட்சர்லாந்து பிடித்த இடமாக எனக்கு மாறிப்போனது. யுரோப் டூர் பேக்கேஜில் ஈஃபிள் டவரும்,
ஸ்விட்சர்லாந்தும் இருந்ததால் ஆர்வமாய் தயாரானேன்.
மொத்தம் 6 நாடுகள், 11 நாட்கள் என பயணம் இருந்தது. முதலில் பாரிஸ், அடுத்து ஜெர்மனி, அதற்கடுத்து பிரிஸில்ஸ், பிறகு நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி என இருந்தது. இந்த நாடுகளில் உள்ள ஐக்கானிக் பிளேஸ்களுக்கு நம்மை அழைத்துச் செல்வார்கள். இந்தியாவில் இருந்து ஃப்ளைட் ஏறியதும் எங்கு தரை இறங்கப் போகிறோம். அங்கு தங்கும் ஹோட்டல். எத்தனை மணிக்கு சைட் விசிட் கிளம்புகிறோம். எந்தெந்த இடங்களை அன்றைக்கு காணப் போகிறோம். அடுத்து எந்த நாடு செல்லப் போகிறோம். எது வழியாகச் செல்கிறோம் போன்ற பயணத்திட்டங்கள் (itinerary) தெளிவாக டிராவல் ஏஜென்ஸி மூலமாக என்னிடத்தில் இருந்தது.
கொச்சினில் இருந்து செயல்படுகிறடிராவல் ஏஜென்ஸி என்பதால் கொங்சி டூ மஸ்கட், மஸ்கட் டூ பாரிஸ் என மொத்த பயணமும் 11 மணி நேரம் எடுத்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த, பல மொழி பேசும் மக்கள் யுரோப் டிரிப்பில் என்னுடன் இணைந்தனர். இதில் குடும்பமாக வந்தவர்கள்… வயதான தம்பதியர்… ஹனிமூன் ஜோடிகள்… இளைஞர்கள் எனக் கலந்தே இருந்தார்கள். நான் மட்டுமே சோலோ டிராவலர் என்பதால் எல்லோரும் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். பயணம் தொடங்கியதில் இருந்து நட்பாக… குடும்பமாக மாறி
எல்லோரும் பழக ஆரம்பித்தோம்.
பாரிஸில் நாங்கள் தங்கிய ஹோட்டல் ரொம்பவே சூப்ப ராக இருந்தது. உணவும் சரியான நேரத்திற்கு சூப்பராக கிடைத்தது. அங்கிருந்து பஸ் மூலமாக சைட் விசிட் செல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஒவ்வொரு நாட்டிலும் இரவு ஹோட்டல் ஸ்டே, பகலில் சுற்றிப் பார்ப்பது என அடுத்தடுத்த நாடுகளை நோக்கி நகர்ந்தோம். சில இடங்களின் கூடுதல் அழகை ரசிக்க இரவிலும் பயணித்தோம்.
பாரிஸில் முதலில் சென்ற இடம் ஈஃபிள் டவர். அடுத்து கப்பலில் (cruise) பயணித்து பாரிஸின் அழகை கண்டு ரசித்தோம். இரண்டு நாட்கள் பாரிஸில் தங்கியதுடன், அடுத்ததாகச் சென்ற நாடு பிரிஸில்ஸ். அங்கிருந்து பெல்ஜியம் அழைத்துச் சென்றார்கள். பெல்ஜியமில் சாக்லேட்டிற்கும், வேஃபெல் பிஸ்கட்டிற்கும் புகழ் பெற்ற இடம். அடுத்ததாகச் சென்றது நெதர்லாந்து. அங்கு ஒரு கிராமத்து வாழ்க்கை மற்றும் வுட்டன் ஷூ தயாரிப்பு, சீஸ் தயாரிப்பு, சாக்லேட் தயாரிப்பு போன்றவற்றை கண்டு ரசித்தோம்.
அதைத் தொடர்ந்து ஆம்ஸ்டர்டாம் சென்றோம். இதை ஹேப்பனிங் சிட்டி என்றும் சொல்லலாம். காரணம், இங்கு பகல் வாழ்க்கை, இரவு வாழ்க்கை என இரண்டும் கலந்தே இருக்கிறது. ஆம்ஸ்டர்டாம் தெருக்கள் அழகாக இருந்ததுடன், நிறைய கால்வாய்களை(canals) அங்கு பார்க்க முடிந்தது. 20 யுரோ கொடுத்தால் ஆம்ஸ்டர்டாம் முழுவதையும் பஸ்ஸில் சுற்றிக் காண்பிக்கிறார்கள்.அடுத்ததாக சென்ற நாடு ஜெர்மனி. இங்கு ஸ்நோ பால் அதிகமாக இருந்தது. கதவு திறந்ததும், குட்டிப் பறவை ஒன்று வெளியில் வந்து ‘குக்கூ… குக்கூ…’ எனச் சொல்லும் புகழ்பெற்ற குக்கூ வால் க்ளாக் தயாரிப்பு இடத்தை இங்கு சென்று பார்வையிட்டோம்.
தொடர்ந்து அங்கு ப்ளாக் ஃபாரஸ்ட் என்கிற இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ஃபாரஸ்ட் பார்ப்பதற்கு அடர்த்தியாக கருப்பு நிறக் காடாய் காட்சி தர, கேக் தயாரிப்புக்கு ரொம்பவே பேமஸான இடமாம். ப்ளாக் பாரஸ்ட் காடுகளை வைத்துதான் அங்கு தயாராகின்ற கேக்கிற்கு ப்ளாக் ஃபாரஸ்ட் என்கிற பெயரும் வந்ததாம்.அடுத்து நாங்கள் சென்ற நாடு பிரிஸில்ஸ். இது ஒரு பழமையான நகரம் என்பதைத் தாண்டி, அந்த நாட்டின் கட்டிடக் கலை பார்க்க கொள்ளை அழகு. மிக உயரமான தேவாலயங்களை காண நேர்ந்தது. அடுத்ததாக சென்ற இடம் நெதர்லாந்து. இந்த நாடு பார்க்க அவ்வளவு ஒரு அழகு. குளிரும் அங்கு அதிகமாக இருந்தது. அந்த நாட்டு மக்கள் கார்களிலோ, பைக்கிலோ பயணிப்பதை பார்க்கவே முடியாது. முழுக்க முழுக்க சைக்கிளைத்தான் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
அடுத்ததாய் சென்ற நாடு சுவிட்சர்லாந்து. இங்கிருந்த இரண்டு நாளையும் என்னால் மறக்கவே முடியாது. கைக்கடிகாரம் தயாரிப்பிற்கு புகழ் பெற்ற நாடு ஸ்விட்சர்லாந்து என்பதைத் தாண்டி, முழுக்க முழுக்க சொர்க்கம் மாதிரியே இருந்தது. சுற்றிலும் வெள்ளி பனி மலைதான். கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடிக்கு மேல் கேபிள் காரில் பயணித்து, ஐஸ் தணலுக்குள் நுழைந்து, சுவிட்சர்லாந்தின் மொத்த அழகையும் பருகினோம். பனிகளுக்குள் நுழைந்து… கைகளில் ஏந்தி விளையாடினோம். இது முழுக்க முழுக்க எனக்கு ஒரு புதுமையான அனுபவம்.
அடுத்ததாக சென்ற இடம் ஹாலந்து. Heaven on earth என்றால் அது ஹாலந்துதான்.
அப்படி கண்ணுக்கு நிறைவான ஒரு இடம். அங்கிருந்த கிராமம், ஆறு என எல்லாவற்றையும் பார்த்து அதன் கொள்ளை அழகை தரிசித்தோம். சீஸ் தயாரிப்புக்கு இது புகழ்பெற்ற ஒரு இடம். அடுத்ததாக பயணம் வெனிஸ் நோக்கி இருந்தது.வெனிஸ் என்றாலே அழகு… அழகு… அழகு… அழகு மட்டும்தான். வெனிஸ் நகரின் வர்த்தகமே தண்ணீரில்தான். அந்த நாட்டின் மிகப்பெரிய சிறப்பு கான்டோலா ரைட் (gondola ride). 1600 வருடத்திற்கு முன்பு தொடங்கிய இந்த விஷயம், அதன் பழமை மாறாமல் இன்றும் அப்படியே காப்பாற்றப்படுகிறது. அதாவது, வெனிஸ் நகரின் மிகக் குறுகலான சாலைகள் தண்ணீருக்குள் மூழ்கி இருக்க, சாலைகளின் இறுபுறமும் குடியிருப்புகள்… உயர்ந்த கட்டிடங்கள்… இடையிடையே சின்னச் சின்ன கால்வாய்களால்(canels) இணைத்திருப்பார்கள். இறுபுறமும் உள்ள கட்டிடங்களுக்கு நடுவில் தண்ணீரில் பயணிக்கும் கான்டோலா பயணம் நமக்கு ஆச்சரியங்களை அள்ளித் தரும்.
இறுதியாய் சென்ற நாடு இத்தாலி. இது பீஸா தயாரிப்புக்கு புகழ் பெற்ற ஒரு நாடு. எனவே அதையும் வாங்கி ருசித்துவிட்டு கிளம்பினோம்.வெளிநாடுகளில் கழிவறை பயன்படுத்துவது மட்டுமே எனக்கு கடினமான விஷயமாக இருந்தது. காரணம், கழிவறை பயன்பாட்டுக்கு பேப்பர் மட்டுமே. எனவே எப்போதும் இரண்டு மூன்று வாட்டர் கேன்களில் தண்ணீரோடு பயணித்தேன்.
எனக்கான பயணத் திட்டம்… அந்நிய நாட்டில் என் செலவுகளை நானே நிர்வகித்தது… முற்றிலும் புதிய மனிதர்களோடு பயணித்தது என டிசம்பர் மாதக் குளிரும்… கிறிஸ்துமஸ் பண்டிகை நேரமும்… யுரோப் நாட்டின் மொத்த அழகையும் கண்டு ரசித்து வந்ததும் எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்ததுடன், இந்தத் தனிமைப் பயணம் கூடுதலாய் எனக்கான நேரத்தைக் கொடுத்து என்னை ரொம்பவே யோசிக்கவும் வைத்தது. சுருக்கமாய் என்னை எனக்கே யார் எனக் காட்டிய தனிமை சுற்றுலாப் பயணம் இது.’’
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்