நன்றி குங்குமம் தோழி
கலைமாமணி பார்வதி பாலசுப்ரமணியன்
‘‘பரதக்கலை என்பது பழம்பெரும் கலை. இசையும் நடனமும்தான் எனது இரு கண்கள்’’ என்கிறார் கலைத்துறையில் ஐம்பது வருடங்களாக வெற்றிகரமாக தடமும் தடயமும் பதித்து வரும் பார்வதி பாலசுப்ரமணியன். சென்னை அண்ணா நகரில் ‘ஸ்ருதிலய வித்யாலயா’ என்கிற பெயரில் நடனமும் இசையும் சொல்லிக் கொடுத்து வருகிறார் இவர். மேடைகளில் இசையில் பல்வேறு சமூக விழிப்புணர்வு பாடல்களை சொந்தமாக எழுதி மெட்டமைத்து பாடி அசத்தி வருகிறார். கலைத்துறையில் உள்ள பல்வேறு பிரபலங்களும், விஐபிகளும் இவரது நாட்டியத்துறை சேவையை பாராட்டியுள்ளனர். இன்றைய பிரபலங்கள் பலரும் எனது மாணவிகள் என்று கூறும் பார்வதி, கலைமாமணி உட்பட பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
*உங்களைப் பற்றி…
எனது சொந்த ஊர் விருதுநகர் பக்கத்தில் உள்ள வத்திராயிருப்பு. என்னுடைய ஆறு வயதில் இசையும் நடனமும் கற்றுக் கொள்ள துவங்கினேன். என் பாட்டிதான் என் முதல் குரு. அவங்களிடம்தான் இசை மற்றும் நடனத்தின் அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதன் பிறகு கோமதி சங்கரன், ராமசாமி, விசாலம், ஜானகி என பலரிடம் பயின்றேன். இசையும் நடனமும்தான் என் எதிர்காலம் என்பதால், மியூஸிக் அகாடமியில் சங்கீதத்தில் ஆசிரியர் பயிற்சியினை முடித்தேன். நவராத்திரி, சிவராத்திரி, திருவிழாக்கள் போன்ற விசேஷ தினங்களில் பல கோயில்களில் என்னுடைய இசை மற்றும் நடன நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. அதன் பிறகு திருமணமாகி சென்னையில் செட்டிலாயிட்டேன்.
நடனப் பள்ளி…
திருமணத்திற்குப் பிறகு கணவரின் பணி மாற்றங்கள் காரணமாக சென்னை மட்டுமில்லாமல் பல இடங்களுக்கு மாற்றலாகி சென்றோம். அதனால் எனது நடன ஆசைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டேன். குடும்பம், குழந்தைகள் என்று என்னுடைய கவனத்தை செலுத்தினேன். இந்நிலையில் ஸ்ரீரங்கம்தான் எனது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. நாங்க அங்கு இருந்த போது, ஒரு பள்ளியில் இசையாசிரியராக பணி கிடைத்தது. அந்த பணி என்னுடைய நடன ஆசைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது. அதன் பிறகு சென்னைக்கு வந்த பிறகு இங்கு ஒரு பள்ளியில் நடன ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தேன்.
அங்கு எனது மாணவிகளுக்கு நான் அளித்த பயிற்சி மற்றும் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் எனக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து சொந்தமாக ஒரு இசை மற்றும் நடனப் பயிற்சி வகுப்புகளை நடத்தலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படித்தான் 1990ல் ஸ்ருதிலய வித்யாலயா துவங்கியது. தற்போது அண்ணாநகரில் மட்டுமில்லாமல் கீழ்ப்பாக்கம், சிந்தாமணி, நந்தம்பாக்கம் என எனது பல கிளைகளை துவங்கினேன். என்னுடைய நடனப் பள்ளியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அவர்களில் 58 மாணவிகள் அரங்கேற்றம் செய்துள்ளனர். கோயில் விழாக்கள், நவராத்திரி போன்ற நிகழ்ச்சிகளும் செய்து வருகிறேன்.
நாட்டியத்தில் சமூக விழிப்புணர்வு…
என்னுடைய நாட்டிய நிகழ்ச்சிக்கு பலரை அழைப்பது வழக்கம். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதில் மேல் ஈடுபாடு இருக்காது. அதனால் அழைப்பு விடுத்தாலும், வர மறுத்துவிடுவார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமா இருந்தது. பரதம் மிகவும் அற்புதமான கலை. அதனை பலரும் கண்டு ரசிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என்ன செய்வதுன்னு புரியல. அந்த சமயத்தில்தான் எரிபொருள் சிக்கனம் குறித்து நடன நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்தது. ஒன்பது வருடங்கள் பெட்ரோல் மற்றும் எரிபொருள் சிக்கனங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினேன். அதே போன்று எக்ஸ்னோரா அமைப்பு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வினை நாட்டியம் மூலம் அமைத்துத் தர சொன்னார்கள்.
அது குறித்த நடன நிகழ்ச்சிகளை 20 வருடங்களாக செய்து வருகிறோம். இதைத் தவிர வேறு என்ன சமூக விழிப்புணர்வினை நடனத்தில் ஏற்படுத்தலாம் என்று யோசித்த போது, ரத்த தானம், கண் தானம், எய்ட்ஸ் குறித்து செய்ய முன்வந்தோம். இந்த நடனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வாரத்தில் மூன்று நாட்கள் சமூக விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தோம். இதற்கான பாடல்கள் மற்றும் இசை, நடன நிகழ்ச்சிக்கான அமைப்பு என அனைத்தும் நானே இயற்றினேன். அது எனக்கு மக்கள் மத்தியில் நற்பெயரையும் நிறைய வாய்ப்புகளையும் பெற்றுத் தந்ததோடு மன நிறைவையும் பெருமகிழ்ச்சியையும் அளித்தது.
பாராட்டுகள், விருதுகள்…
பிரபல பழம்பெரும் நடிகை பானுமதி எனது நாட்டிய சேவையை பாராட்டி எனக்கு அஷ்டாவதானி என்ற பட்டம் அளித்தார். தமிழக அரசின் சிறந்த நடன ஆசிரியருக்கான கலைமாமணி விருதினை பெற்றேன். பாலசரஸ்வதி விருது, கரந்தை தமிழ் சங்க விருது, எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, அன்னை தெரசா விருது உட்பட 80க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளேன். எக்ஸ்னோரா அமைப்பு என்னுடைய சமூக பணிக்காக பெண் கலைவாணர் விருது வழங்கி கௌரவித்தது.
மேலும் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி அவர்களின் கையால் கண்ணதாசன் விருது, பாரதி கண்ட புதுமை பெண் விருது, மக்கள் கவிஞர் விருது போன்ற பெருமைமிக்க விருதுகளை பெற்றிருக்கிறேன். தமிழகம் மட்டுமில்லாமல் அந்தமான், துபாய், சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இலங்கை, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள தமிழ் சங்கங்களின் அழைப்பின் பேரில் நிறைய நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கேன். சிதம்பரம் மற்றும் கரூர் நாட்டியாஞ்சலி போன்றவற்றிலும் நடன நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன்.
எழுத்தார்வம்…
எனக்கு பொதுவாகவே தமிழ் மீது பற்று அதிகம். மேலும் புத்தகம் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. எங்களின் நடனப் பள்ளியின் 35வது ஆண்டு விழாவில் ‘சின்னச் சின்ன நீதிக்கதைகள்’ என்ற பெயரில் நீதிக்கதைகளை எழுதி வெளியிட்டேன். 2022ல் ‘என்னை நான் பார்த்த போது’ என்று ஒரு நூலை எழுதி வெளியிட்டேன். 2020ல் கொரோனாவால் நானும் இரண்டு வருஷம் முடங்கி போனேன். அதன் பிறகு மீண்டும் எழுந்து முழு வீச்சில் என் கலை துறையில் பயணிக்க துவங்கி இருக்கிறேன்’’ என தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார் கலைமாமணி பார்வதி பாலசுப்ரமணியன்.
தொகுப்பு: தனுஜா