Monday, June 23, 2025
Home மகளிர்நேர்காணல் மக்களுக்கு பாலமாக இருக்கவே விரும்புகிறேன்!

மக்களுக்கு பாலமாக இருக்கவே விரும்புகிறேன்!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

‘உன்கிட்ட காடு இருந்தால் எடுத்துக்கிடுவானுங்க, ரூவா இருந்தால் பிடுங்கிக்கிடுவானுங்க… ஆனால், படிப்பை மட்டும் உன்கிட்டருந்து எடுக்கவே முடியாது’ என்கிற திரைப்பட வசனம் உலகின் கடைக்கோடி பகுதி வரை கல்வியின் அவசியத்தை உணர்த்தியது என்றே சொல்லலாம். ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் கல்வி என்பது அந்நபரை சார்ந்த குடும்பம் மட்டுமல்லாது அவரைச் சுற்றியுள்ள சமூகத்தையும் மேம்படுத்தக்கூடிய வலிமையுடையது. சிறந்த கல்வியினால் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு மட்டுமின்றி ஒருவருக்கு தனிப்பட்ட அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தரமுடிகிறதென்றால், அக்கல்வி அனைவருக்கும் அவசியம்தானே?

ஒரு காலக்கட்டத்தில் கல்வியில் பின்தங்கியிருக்கும் பகுதியாக கருதப்பட்ட சென்னையை சேர்ந்த கண்ணகி நகர் பகுதி இன்று கல்வியில் கவனம் செலுத்தி தன் அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கான பாதையில் செல்கிறது. அப்பகுதியில் செயல்பட்டு வரும் முதல் தலைமுறை கற்றல் மையம் கண்ணகி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிப்பவர்களை சிறந்த மாணவர்களாகவும், தொழில்முனைவோர்களாகவும், கலைகளில் சிறந்து விளங்குபவர்களாகவும் உருவாக்கி வருகிறது. முதல்தலைமுறை கற்றல் மையம் குறித்து அதன் நிறுவனர் மாரிசாமியிடம் பேசியதில்…

“2016ல் ‘ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம்’ எனும் பெயரில் கண்ணகி நகர் பகுதியில் செயல்படத் தொடங்கினோம். இப்பகுதியில் வசிக்கும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்தும் முயற்சியைதான் முதலில் கையிலெடுத்தேன். ஆரம்பத்தில் இதனை தொடங்கிய போது பெரிதும் இடவசதி ஏதுமில்லாததால் பள்ளிக்கூடங்களிலும் கிடைக்கின்ற இடங்களிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளை எடுக்கத் தொடங்கினோம். கண்ணகி நகர் குடியிருப்பு பகுதியில் கல்வியில் இடைநிற்றல் செய்யும் மாணவர்கள் அதிகமாக இருந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் இடைநிற்றல் செய்யாமல் கல்வியை பெறுவதற்கு, கல்வியை ஊக்குவிக்கும் வேறு சில பயிற்சிகள் கொடுக்க தொடங்கினோம். இதற்காக ஒரு கற்றல் திறன் மேம்பாட்டு மையம் அமைத்தால் நன்றாக இருக்குமென்று சிந்தித்து, அரசின் உதவியை நாடிய போது 2021ம் ஆண்டு முதல் தலைமுறை கற்றல் மையம் தொடங்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கபடி, கோகோ, வாலிபால், கேரம், செஸ், சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை, பறை இசை, கீ போர்டு, கிட்டார், நடனம், நாடகம், பப்பட், கைவினை கலைப்பொருட்கள், அடிப்படை ஆங்கிலம், கணினி பயிற்சி, வாழ்க்கைத்திறன் மற்றும் மென் திறன் பயிற்சிகள் போன்ற 18 வகையான பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

மாணவர்கள் பெரும்பாலும் உயர்நிலை கல்விக்குப் பிறகு குடும்பச்சூழல், பொருளாதார பின்னடைவு காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்கும் வகையில், மாணவர்களை கல்லூரி படிப்புக்கு ஊக்குவித்து, கல்விச் செலவுகளை பூர்த்தி செய்து இதுவரையில் 272 பட்டதாரிகள் முதல்தலைமுறை கற்றல் மையம் உதவியுடன் உருவாகியுள்ளனர். இதற்காக சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐபிஎஸ், காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் என பலரும் உதவி வருகின்றனர். மாணவர்கள் இங்கு அளிக்கப்படும் பயிற்சிகளை யன்படுத்திக்கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வரும்போது மகிழ்ச்சியாக இருக்கும். இப்பகுதியில் வசிக்கும் எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கும் மூத்தவர்களுக்கும் அடிப்படை கல்வியறிவினை போதித்து அடிப்படை விவரங்களை எழுதவும், படிக்கவும் கற்பித்து வருகிறோம்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“குடும்பச்சூழல், பொருளாதார பின்னடைவு போன்ற காரணங்களாலும் இப்பகுதி சிறுவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க இயலாத நிலையும் ஏற்பட்டிருந்தது. இக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அன்றாட தேவைக்கே பெரிதும் அல்லாடுகிறவர்கள். உணவு, உடை, உறைவிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்ற இந்நிலையில், கல்வியின் அவசியத்தை அறியாமல் இருக்கின்றனர்.

அடிப்படை கல்வியின்றி உடல் உழைப்பை மட்டுமே வைத்து பிழைத்துக்கொள்ளும் பெற்றோர்களை பார்க்கும் பிள்ளைகளும் அதையே பின்பற்ற நினைக்கின்றனர். பெற்றோர்களும் அறியாமையின் காரணமாக பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதை தவிர்த்து, தங்களால் இவ்வளவுதான் முடியும் என்று நினைத்து தங்களது பிள்ளைகளையும் தாழ்வுமனப்பான்மைக்கொள்ளும் சூழலிலேயே தக்கவைத்துக்கொள்கின்றனர். அத்தியாவசிய தேவைகளையே அவர்களால் இயல்பாக பெற முடியாத நிலையில் கல்விக்கு முன்னுரிமை அளிக்க தயங்குகின்றனர். இது ஒரு சுழற்சி முறையில் தொடர்வதால், இங்கு கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்னடைவு ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு குடும்பப் பெண்களை பொருளாதாரத்திலும் அடிப்படை அறிவிலும் மேம்பட வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். தாங்கள் முன்னேறும் போது நிச்சயம் தங்கள் பிள்ளைகளையும் படிக்க அனுப்புவார்கள். குடும்பப் பொருளாதாரம் சீராகும் போது குடும்பச்சூழல் கருதி கல்வி இடைநிற்றல் எண்ணிக்கை குறையும். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் கடினமான வேலையினை செய்துவருகின்றனர்.

மேலும் இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தேவையான தனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றவர், முதல் தலைமுறை கற்றல் மையம் மூலம் பெண்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கினார்.
“கண்ணகி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் பெண்களின் மேம்பாட்டிற்காக கார், ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி, ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி, மான்டசொரி கல்விமுறை ஆசிரியர் பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரையில் 520 பெண்கள் தங்களது பயிற்சிகளை நிறைவு செய்து முழு நேரம் மற்றும் பகுதி நேர வேலையாகவும் அல்லது சுய தொழிலாகவும் செய்து வருகின்றனர். ட்ரைவிங் பயிற்சி பெற்ற பெண் ஒருவர் தன் கணவருடன் இணைந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். எம்ப்ராய்டரி தையல் பயிற்சி எடுத்தவர்கள் பொட்டிக்கில் பணிபுரிகின்றனர், சிலர் சுயதொழில் செய்து வருகின்றனர். அனைத்துப் பயிற்சிகளும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் அளிக்கப்படுகிறது. கண்ணகி நகர் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் மான்டசொரி கல்விமுறையை அறிமுகப்படுத்தி இங்கு பயிற்சி எடுத்தவர் மான்டசொரி ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் பெண்கள் பலரும் குடும்பம் மற்றும் குழந்தைகளை காரணமாக கூறி பயிற்சிகளை தவிர்த்து வந்தனர். ஆனால் அவர்களின் முன்னேற்றத்திற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்பதை கருதி, பெண்கள் பயிற்சியில் சேர்க்கை பெறும் போதே கணவர் அல்லது பெற்றோர்களிடம் இதன் பயன்களை விளக்கி அவர்களின் ஒப்புதலோடு பயிற்சிக்கு வர உதவுகிறோம். மேலும் பயிற்சியின் போது குழந்தைகளையும் அருகில் வைத்துக்கொள்ள அனுமதிப்பதால், குழந்தைகள் தங்கள் கண்காணிப்பில் இருப்பதால், தைரியமாக பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.

குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட பால் மற்றும் சத்தான உணவுகளும் வழங்கினோம். பயிற்சியில் பங்கேற்பவர்கள் நேரம், ஒழுக்கம் இவற்றை கடைபிடித்தாலே அவர்களால் சிறப்பாக பயிற்சியை நிறைவு செய்ய முடியும். பயிற்சியினை முடித்தவர்கள் இன்று வெற்றிகரமாக வேலையோ அல்லது தொழிலோ செய்து வருகிறார்கள். அவர்கள் தற்போது பயிற்சி பெறுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கின்றனர்.

அறிவு சார்ந்த பயிற்சி மட்டுமில்லாமல் அதில் பங்கேற்கும் பெண்கள் மற்றும் மாணவர்களின் உடல் மற்றும் மனநலம் மேம்பட யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் கண்ணகி நகர் குடியிருப்பு பகுதி மக்களுக்காக அடிக்கடி மருத்துவ முகாம்களும் இங்கு நடத்தப்படுகின்றன. கற்றல் மையம் உதவியுடன் படித்த மாணவர்கள் பலரும் இங்கு தன்னார்வலர்களாக செயல்படுகின்றனர். நான் முதல் தலைமுறை கற்றல் மையத்தின் நிறுவனர் என்றாலும், இந்த அறக்கட்டளைக்கு கிடைக்கின்ற உதவிகளை தேவையுள்ள சரியான மக்களிடம் கொண்டு போய் சேர்க்கின்ற ஒரு பாலமாக இருக்கிறேன்” என்றார் மாரிசாமி.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi