Saturday, July 12, 2025
Home மகளிர்சிறப்பு கட்டுரைகள் திருநங்கை வாழ்வியலை பேசும் நான் ரேவதி ஆவணப்படம்!

திருநங்கை வாழ்வியலை பேசும் நான் ரேவதி ஆவணப்படம்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

திருநர் சமூகத் தின் செயற் பாட்டாளர் ரேவதி. இவருடைய வாழ்க்கையை பற்றி ‘நான் ரேவதி’ என்ற பெயரில் ஆவணப்படம் வெளிவர இருக்கிறது. அந்தப்படம் கேரளாவில் நடந்த நாடக விழாவில் திரையிடப்பட்டு சிறந்த ஆவணப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பொதுவாக திருநங்கைகள் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையை பற்றியும் படங்கள் வருவது அரிது. அதிலும் அவருடைய கதாப்பாத்திரத்தில் அவர்களே நடிக்க மாட்டார்கள். ஆனால், ரேவதி அவரின் வாழ்க்கைப் பற்றிய ஆவணப்படத்தில் தானே நடித்துள்ளார். அதோடு 2025ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் சிறந்த திருநங்கை விருதையும் பெற்றிருக்கிறார்.

சமூக செயல்பாடுகள், ஆவணப்படம் திரையிடல் என மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தவரிடம் பேசிய போது…‘‘நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எனக்கு 12 வயது இருக்கும். அப்போதுதான் நான் முதல் முறையாக பெண்ணாக உணர்ந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் ஆணாக இருக்கும் போது அவர்களுக்குள் ஒரு பெண் போன்ற உணர்வு ஏற்படுவது குறித்து, அந்த மாற்றம் ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது போன்ற பெண் தன்மை ஒரு ஆணுக்குள் ஏற்பட்டால் அவர்களை வீட்டில் ஏற்கமாட்டார்கள். அதனால் மும்பைக்கு சென்றுவிடுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கேன். அதனால் நானும் வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு ஓடிட்டேன்.

அங்கு வேலை எதுவும் கிடைக்கல. அதனால் அங்குள்ள திருநங்கைகளுடன் சேர்ந்து கடைகளில் யாசகம் கேட்க ஆரம்பித்தேன். அப்படித்தான் என்னுடைய நாட்கள் நகர்ந்தது. அந்த சமயத்தில் ஒரு நாள் லாரி டிரைவர்களிடம் யாசகம் கேட்ட போது, அதிலிருந்து என் ஊரை சேர்ந்தவங்க என்னை அடையாளம் கண்டுபிடிச்சி என்னை மறுபடியும் ஊருக்கே அழைச்சிட்டு வந்துட்டாங்க. எங்க வீட்டில் எல்லோரும் என் மேல் இருந்த கோபத்தில் என் அண்ணன்கள் எனக்கு மொட்டை அடிச்சது மட்டுமில்லாமல் என்னை வீட்டை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனால், என்னால் அங்கிருக்க முடியவில்லை. என்னதான் நான் பிறந்து வளர்ந்த வீடு என்றாலும் என்னுடைய உலகம் அங்கில்லைன்னு எனக்குள் தோன்றியது.

அதனால் மறுபடியும் வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கே சென்றுவிட்டேன். அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால் படிப்பு இல்லை, சரியான வேலை இல்லை. தினமும் யாசகம் செய்ய பிடிக்காமல், வேறு வழி இல்லாமல் மீண்டும் வீட்டிற்கே வந்தேன். நான் வீட்டுக்கு மறுபடியும் வந்த போது என் அண்ணன்கள் என்னை அடிச்சாங்க. ஆனால், என் அப்பா என் நிலை புரிந்து இனிமேல் என்னை அடிக்கக்கூடாதுன்னு அண்ணன்களிடம் சொல்லிட்டார்.

ஆனால், வீட்டில் இருப்பவர்களை நம்பித்தான் இனி என்னுடைய எதிர்காலம் என்பதால், அது பிடிக்காமல் பெங்களூரூக்கு சென்றேன். அங்கு ‘சங்கமா’ என்ற தன்னார்வ நிறுவனத்தில் அலுவலக பணியாளராக வேலைக்கு சேர்ந்தேன். இந்த அமைப்பு குறிப்பாக எங்களைப் போன்ற பாலின சிறுபான்மையினருக்காகவே அமைக்கப்பட்டிருந்தது. அங்கு
திருநங்கைகள் குறித்த செய்திகளை சேகரிப்பது, அலுவலகத்தை பராமரிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தேன்’’ என்றவர், திருநங்கை சமூகத்தினரின் உரிமைகளுக்காக போராடி வருவதை பற்றி பேசத் தொடங்கினார்.

‘‘அடையாளத்தை எப்போதும் மறைக்கக்கூடாது என்பதற்காகவே எங்கள் மீது சுமத்தப்படும் இழிவுகளை துடைத்தெறிந்து சமூக விடுதலைக்காக ெசயல்பட்டு வரும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினேன். அங்கு வேலை செய்யும் போது ஏன் திருநங்கை சமூகம் மட்டும் தொடர்ந்து யாசகம் செய்து வாழ்கிறது. அவர்களுக்காக குரல் கொடுக்கவோ அவர்களின் தேவை அறிந்து வேலை கொடுக்கவோ ஏன் யாரும் முன்வருவதில்லை என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தது.

அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கினேன். யாராவது அவர்களுக்கு தொந்தரவு கொடுத்தால், யாரிடம் புகார் கொடுப்பது, வழக்குகளில் கைது செய்தால் உடன் ஒரு பெண் காவலர் இருக்க வேண்டும், எங்களின் அடிப்படை உரிமைகள் என்னவென்று அனைத்தும் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளித்தேன். அதன் பிறகு அவர்களை ஒன்றாக இணைத்து சிறு சிறு அமைப்புகளாக உருவாக்கினேன். சங்கமா அமைப்பின் கிளைகளை தமிழ்நாடு, ஓசூர் பகுதியிலும் தொடங்கினோம். அதன் பிறகு நான் அந்த அமைப்பில் இருந்து விலகி தனியாக செயல்பட ஆரம்பித்தேன்’’ என்றவர், அவர் எழுதிய புத்தகம் மற்றும் ஆவணப்படம் குறித்து பேசினார்.

‘‘தன்னார்வ நிறுவனங்களால் குறிப்பிட்ட விஷயங்களில் மட்டுமே தலையிட முடியும். அதனால் நான் தனித்து செயல்பட விரும்பினேன். அதன் முதல் கட்டமாக திருநங்கைகளின் வாழ்க்கை குறித்து சமூகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால், ‘உணர்வும் உருவமும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டேன். முதன் முதலாக திருநங்கைகள் பற்றி திருநங்கையே எழுதிய நூல். அதனைத் தொடர்ந்து என் வாழ்க்கை வரலாற்றை ‘வெள்ளை மொழி’ தலைப்பில் மற்றொரு புத்தகம் எழுதினேன்.

இதுவரை நான்கு புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அதன் பிறகு என் வாழ்க்கையில் நான் அனுபவித்த வலிகளை நாடகமாக அரங்கேற்றினேன். அதில் நானே என் கதாப்பாத்திரம் ஏற்று நடித்தேன். பள்ளி, கல்லூரிகளிலும் என் நாடகத்தை அரங்கேற்றி வருகிறேன். அதைப் பார்த்த ஆவணப்பட இயக்குனர் அபிஜித் என்னைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று எடுக்க இருப்பதாக கூறினார். நான் 35 வருடமாக எங்களின் சமூகத்திற்காக சேவை செய்து வருகிறேன். இதன் மூலம் எங்களின் சமூகத்திற்கு ஒரு நல்லது நடக்கும்னு நினைச்சேன். ‘நான் ரேவதி’ என்ற தலைப்பில் அவர் எடுத்த ஆவணப்படம் கேரளாவில் நடைபெற்ற நாடக விழாவில் திரையிடப்பட்டு சிறந்த ஆவணப்படம் என்று விருதை பெற்றது. அடுத்ததாக மும்பையிலும் திரையிட இருக்கிறோம்.

திருநங்கைகளை பற்றி எள்ளளவும் தெரியாதவர்கள் இந்த மாதிரியான ஆவணப்படங்கள், புத்தகங்கள், நாடகங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடியும்’’ என்றவர், அதற்காக அவர் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து பேசினார்.‘ஆண், ெபண் இருபாலரையும் இயல்பாக ஏற்பது போல் எங்களையும் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய குறிக்கோள் எங்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

அரசு, தனியார் நிறுவனங்களில் மற்றவர்களை வேலையில் நியமிப்பது போல் எங்களையும் வேலைக்கு எடுக்க வேண்டும். எங்களுக்கு என குறிப்பிட்ட அளவில் வேலைக்கான இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். எங்களைப் போன்றவர்களை இன்றும் பெரிய அளவில் எங்களின் குடும்பங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இது உடலில் ஏற்படும் மாற்றம். அந்த உணர்வினை உறவுகள் மட்டுமில்லாமல் இந்த சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார் ரேவதி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi