Monday, September 9, 2024
Home » நான் IAS வழிகாட்டி!

நான் IAS வழிகாட்டி!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி 

ஆனந்த ரெஷ்மி

‘‘நீங்கள் ஐஏஎஸ் ஆகவேண்டுமா? இதுக்கு லாங் டெர்ம் கோல் முக்கியம்’’ எனப் பேச ஆரம்பித்தவர் ஐஏஎஸ் மென்டாராக மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆனந்த ரெஷ்மி.
‘‘+2 படித்தபோது நான் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்பது போதை மாதிரியான விஷயமாக எனக்குள் இருந்தது. மக்களுடன் இணைந்து பயணிப்பது மாதிரியான கனவுகள் அடிக்கடி வந்தன. யுபிஎஸ்ஸி தேர்வுக்கு நான் தயாரான போது, சரியான வழிகாட்டி இல்லாமல், பிரிமிலினரிக்கு பிறகு மெயின் தேர்வுகள் உண்டு.

அதில் ஆஃப்ஷனல் பிரிவுகள் இருக்கிறது போன்ற விபரங்கள் தெரியாமலே நுழைந்தேன். சரியான வழிகாட்டி மட்டும் எனக்கும் கிடைத்திருந்தால் நிச்சயம் இலக்கை அடைந்திருப்பேன்’’ என்றவாறு நம்மிடம் பேச ஆரம்பித்தார் ரெஷ்மி.‘‘தூத்துக்குடியில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். அப்பா சாதாரணக் கூலித் தொழிலாளி. வீட்டுக்கு நான்தான் மூத்தப் பெண். எனக்கு பிறகு இரண்டு தங்கைகள். படிக்கணும். படிப்புதான் கைகொடுக்கும் என்கிற சூழல் நிறைந்த வாழ்க்கை.

ஒவ்வொரு ஆண்டும் வகுப்பில் சிறந்து விளங்கும் டாப்பர் மாணவர்களை தேர்ந்தெடுத்து கல்வி உதவித் தொகை வழங்குவார்கள். அடுத்த வருடம் நான் படிக்கணும்னா இந்த வருடம் பெஸ்ட் ஸ்டூடென்டாக இருக்கணும். இப்படித்தான் கல்வி உதவித் தொகை எதிர்பார்த்து என் ஒவ்வொரு வருடப் படிப்பும் பெஸ்ட் ஸ்டூடென்டாகவே +2 வரை நகர்ந்தது. பள்ளி மாணவியாக இருந்தபோதே, எனக்குத் தெரிந்ததை தெரியாத மாணவர்களுக்கு சொல்லித் தருகிற போக்கும் தானாகவே எனக்குள் இருந்தது.

குடும்பத்தின் முதல் பட்டதாரியாக, தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பிஎஸ்ஸி ஜியாலஜி படிக்கும் போதே பகுதிநேர வேலையாக டியூசன் எடுக்க ஆரம்பித்தேன். அடுத்து எம்எஸ்ஸி படிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதியதில், டாப் லிஸ்டில் என் பெயரும் இருந்தது.

ஆனால் கவுன்சிலிங் செல்ல பணம் கட்ட முடியாத நிலை. பரவாயில்லை… சம்பாதித்து பணத்தை சேர்த்த பிறகு படிக்கலாம் என்ற முடிவோடு கிடைத்த வேலை ஒன்றில் இணைகிறேன். வேலைக்குச் செல்வதால் மேலே படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நேரத்தில் வீட்டில் பார்த்த உறவினர் மாப்பிள்ளையோடு திருமணம் முடிந்து மகளும் பிறக்கிறாள்.

இல்லற வாழ்வு எனக்கு சரியாக அமையவில்லை. படிப்பையும் பணத்தையும் என்னால் உருவாக்க முடியும். ஆனால் அன்பு?! அவருடனான வாழ்வில் நிம்மதியில்லாமல் திருமண வாழ்க்கையை விட்டு குழந்தையோடு வெளியில் வருகிறேன். இந்த நிலையில்தான் சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் என்கிற தகவல் தொலைக்காட்சி மூலம் எனது கண்களில் படுகிறது. விண்ணப்பித்துவிட்டேன். ஆனால், என்ன படிக்கணும்? எப்படி படிக்கணும்? யாரை அணுகனும்? எதுவுமே தெரியாமல், ஐஏஎஸ் புத்தகத்தை தேடி புத்தகக் கடைக்குச் செல்கிறேன்.

2000 பக்கங்கள் கொண்ட ஐஏஎஸ் பயிற்சி புத்தகம் ஒன்றை வாங்கி முதல் 50 பக்கமே படிக்கிறேன். அதில் இருந்தவை பள்ளியில படித்த பாடங்களாகவே இருக்க, தேர்வு சுலபம்தான்,
வெற்றிபெறலாம் என நினைத்து தேர்வெழுதச் செல்கிறேன். முதல் பிரிமிலினரி தேர்வை நான் எழுதியது 2010. அப்போதுதான் தெரிகிறது நான் படித்தது சரியான வழிமுறை கிடையாது. இன்னும் அதிகமாக படிக்க வேண்டுமென. மீண்டும் எம்எஸ்ஸி ஜியாலஜி படிப்பில் சேர்ந்தபோது மகள் 8 மாத கைக்குழந்தை. ஆனாலும் யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டராக படிப்பை முடித்து வெளியில் வருகிறேன்.

2013 சிவில் சர்வீஸ் தேர்வில் மீண்டும் பிரிமிலினரி எழுதி தேர்வான பிறகே, மெயின் தேர்வு குறித்தும் அதில் இருக்கும் ஆப்ஷனல் பாடங்கள் குறித்தும் தெரிய வருகிறது. யுபிஎஸ்ஸி தேர்வுக்கு நம் கை பிடித்து வழிநடத்த ஒரு வழிகாட்டி கண்டிப்பாகத் தேவை. அது எனக்கு இல்லாமல் போனதால், சிவில் சர்வீஸ் தொடர்பான ஒவ்வொன்றையும் அந்த ரூட்டில் பயணித்தே அடிபட்டு அடிபட்டு கற்றுக்கொண்டேன். இதில் காலவிரயம் ஆனது.பொருளாதாரத் தேவைக்காக கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றியவாறே பிஎச்டி படிப்பிலும் இணைகிறேன். கைக்குழந்தையோடு இதெல்லாம் தேவையா என வீட்டிலும், வெளியிலும் பேச ஆரம்பித்தனர். எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் இலக்கை நோக்கி நகர்ந்ததில், சிவில் சர்வீஸ்
தேர்வுக்காக விரிவுரையாளர் பணியை விடவேண்டிய நிலை.

மனிதநேய அறக்கட்டளையில் இணைந்து அடுத்த யுபிஎஸ்ஸி தேர்வை சந்திக்க மீண்டும் தயாரானபோதுதான், என்சிஆர்டி என்கிற புத்தகம் ஒன்று இருப்பதே தெரிய வருகிறது. வருமானத்திற்காக ஒவ்வொரு ஐஏஎஸ் அகாடமியாக ஆசிரியர் பணியிலும் ஈடுபடுகிறேன். மாணவியாக இருந்தவள், ஆசிரியராகசிவில் சர்வீஸ் அகாடமிகளுக்குள் நுழைந்தபோதுதான் அங்குள்ள செயல்பாடுகளை உணர முடிந்தது. யுபிஎஸ்ஸி தேர்வுகளை எழுதும் மாணவர்களின் தேவை ஒன்றாக இருக்கும் போது அகாடமியின் செயல்பாடுகள் வேறொன்றாக இருந்தது.

யுபிஎஸ்ஸி தேர்வு வினாத்தாள்களில் 80 சதவிகிதமும் நடப்பு விவகாரம் (current affairs) குறித்த கேள்விகளே இருக்கும். அதாவது, பத்தாண்டுகளில் நடந்த ‘ஒன்டீகேட்’ நிகழ்வுகள்தான் கரன்ட் அஃபயர்ஸாக வினாத்தாளில் இடம்பெறும். ஆனால் நடப்பு விவகாரத்தில் மாணவர்களை வழிகாட்டும் ஆசிரியர்கள் இல்லை. அல்லது குறைவாக இருந்தார்கள். அதாவது, 80 சதவிகிதம் கேள்விகள் வரக்கூடிய current affairs பாடத்திற்கு 10 சதவிகித முக்கியத்துவமும், 20 சதவிகிதம் மட்டுமே கேள்விகள் வருகின்ற வரலாறு, புவியியல், அறிவியல், பாலிட்டி பாடங்களுக்கு
90 சதவிகிதம் முக்கியத்துவத்தைக் கொடுத்து, பணத்தை மட்டுமே சம்பாதிக்கும் நோக்கில் மாணவர்களின் நேரத்தை அகாடமிகள் விரையம் செய்வது சரியான வழிமுறை இல்லை எனப்பட்டது ஐஏஎஸ் அகாடமிகளில் மிகப்பெரிய அரசியல் நிகழ்வது புரிய ஆரம்பித்தது.

மெயின் தேர்வில் உள்ள 26 ஆப்ஷனல்களில் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். அந்த ஒன்று எதுவென்பதும், உனக்கான பாஷனாக எது இருக்கிறது என்பதே இதில் முக்கியம். ஆனால் அகாடமியில் 4 ஆப்ஷனல் பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் இருப்பதால் அதை மட்டுமே மாணவர்களை படிக்க அறிவுறுத்துகிறார்கள். அந்த 4 பாடங்களில் +2வில் மாணவர்கள் படிக்காத வரலாறு, புவியியல், பாலிட்டி பாடங்கள்தான் பெரும்பாலும் இருக்கிறது.

சரியான பாதையில் மாணவர்கள் பயணிக்க வழிகாட்டும் ஆசிரியராக 2019ல் அகாடமிகளில் இருந்து முழுமையாய் வெளியேறி வி4யு ஐஏஎஸ் அகாடமி ஒன்றை சொந்தமாகத் தொடங்கி மாணவர்களின் வழிகாட்டியாய் மாறினேன்’’ என்கிற ரெஷ்மி, ‘‘யுபிஎஸ்ஸி தேர்வுக்கு சரியான வழிகாட்டுதலைப் பின்பற்றுவதுடன், தேர்வை எழுதப்
போகிற வருடத்தில் கொடுக்கும் அர்ப்பணிப்பே வெற்றியை தீர்மானிக்கும்’’ என்கிறார் மிக அழுத்தமாக.‘‘நான் தேர்வுகளை சந்தித்தபோது, என்னிடம் ஆர்வம்(passion), உறுதிப்பாடு(determination), தொடர் போராட்டம்(pursuving) என எல்லாமும் இருந்தது. ஆனால் 24 மணி நேரத்தில் 14 மணி நேரத்தை முழுமையாகக் கொடுக்க வேண்டும். என் பொருளாதார சூழலால் முழுமையான அர்ப்பணிப்பை கடைசிவரை கொடுக்க முடியாமலே போனது’’ என்கிறார் வருத்தத்தோடு.

‘‘ஐஏஎஸ் என்பது ஆளுமை. இதை சிலபஸிற்குள் அடக்கிவிட முடியாது. வரலாறு, புவியியல், அறிவியல், அரசியல், கரென்ட் அஃபயர்ஸ்களைப் படித்தாலும், இவற்றுக்குள் கடல் மாதிரியான விஷயங்கள் ஆழமாய் மிக நுணுக்கமாய் பொதிந்து கிடக்கும். இவற்றைத் தெரிந்துகொள்ள மாணவர்கள் 6ம் வகுப்பில் இருந்தே தங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்க வேண்டும்.

யுபிஎஸ்ஸி தேர்வு வினாக்கள் மத்திய அரசு பாடத்திட்டத்தில் (CBSC) 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பாடங்களின் அடிப்படையில் இடம்பெறும். மதிப்பெண்களுக்காக மட்டுமே படிக்காமல், பாடத்துடன் நடப்பு நிகழ்வுகளை லிங் பண்ணி படிக்க முயலவேண்டும். இதற்காகவே ஆன்லைன் வழியாக ஜூனியர் ஐஏஎஸ் என்கிற திட்டத்தை பள்ளி மாணவர்களுக்காக அறிமுகம் செய்து வழிகாட்டியாக பயணப்பட ஆரம்பித்தேன்’’ என்கிறார் புன்னகையுடன். ஐ.ஏ.எஸ் ஆவதுதான் உங்கள் கனவெனில் இஞ்சினியரிங் படிப்பு எதற்கு? +1 பாடத்திட்டத்தில் இருக்கும் முதல் பிரிவும்(first group), இஞ்சினியரிங் படிப்பும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தேவையற்ற ஆணி’’ என்றவாறு மீண்டும் புன்னகைத்து விடைபெற்றார்.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

 

You may also like

Leave a Comment

seventeen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi