ஹூண்டாய் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட அல்காசர் கார்ப்பொரேட் வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 116 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. 7 சீட்டர் கொண்ட இந்த காரில் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சமாக பனோரமிக் சன்ரூப் இடம் பெற்றுள்ளது. இதுதவிர, எல்இடி ஷெட்லாம்ப், டூயல் ஜேன் ஏசி, ஆம்பியன்ட் லைட்டிங், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே, 6 ஏர்பேக் ஆகிய அம்சங்கள் உள்ளன.
எடை குறைவு, எரிபொருள் சிக்கனம், விலை குறைவு கருதி டீசல் வேரியண்டில் இதற்கு முன்பு பனோரமிக் சன்ரூப் வசதி இல்லை. தற்போது வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்காக இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. துவக்க ஷோரூம் விலையாக அல்காசர் டீசல் கார்ப்பொரேட் வேரியண்ட் சுமார் ரூ.7.87 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் புதிய அல்காசர் பிரஸ்டீஜ் பெட்ரோல் டிசிடி கியர்பாக்ஸ் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.18.64 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பு பெட்ரோல் பிளாட்டினம் டிரிம்மில் மட்டுமே டிசிடி வேரியண்ட் இடம் பெற்றிருந்தது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.20.94 லட்சம். அதே வசதி கொண்ட புதிய பெட்ரோல் வேரியண்ட் சுமார் ரூ.2.3 லட்சம்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.