ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 55வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்-டெல்லி கேப்பிடல்ஸ் மோதுகின்றன. டெல்லி இதுவரை 10 போட்டியில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 போட்டியில் குறைந்தது 2 போட்டியில் வென்றால் தான் பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கும்.
கடைசி 2 போட்டியில் ஆர்சிபி, கேகேஆரிடம் வீழ்ந்த நிலையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி, பிளே ஆப் வாய்ப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் அபிஷேக் போரல், டூ பிளெஸ்ஸிஸ், கருண் நாயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சில் ஸ்டார்க், முகேஷ் குமார், அக்சர் படேல், குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படவேண்டும். இன்று தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
மறுபுறம் சன்ரைசர்ஸ் 10 போட்டியில் 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் எஞ்சிய போட்டிகளில் வெற்றிபெற்று கவுரவமக வெளியேறும் எண்ணத்தில் உள்ளது.பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், ஹென்ரிச் கிளாசன், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் டெல்லி பவுலர்களுக்கு நெருக்கடி அளிப்பர்.
பந்துவீச்சில் முகமது ஷமி, ஜெயதேவ் உனத்கட், கேப்டன் பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல் என சிறந்த வீரர்கள் இருந்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சிறந்த சுழற்பந்துவீச்சாளர் இல்லாததும் பின்னடைவாக உள்ளது. இரு அணிகளும் வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.