திருமலை: ஐதராபாத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து பலரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதால் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 2 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதனிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவில் ‘ஸ்லீப்பர் செல்கள்’ இருக்கலாம் என்பதால் உஷார் நிலையில் இருக்குமாறு ஒன்றிய அரசு எச்சரித்தது.
அதன்பேரில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் விஜயநகரத்தை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிராஜ்(33), சமீர்(33) ஆகிய 2பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தி பலரை கொல்ல திட்டம் தீட்டியது தெரியவந்தது. அவர்களது வீட்டில் இருந்த ஏராளமான வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை விஜயநகரம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இருவரும் விசாகப்பட்டினம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை என்ஐஏ மற்றும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.
4 பேருக்கு வலை;
கைதானவர்களில் சமீர் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள போய்குடா பகுதியில், தனது தாய் மற்றும் சகோதரியுடன் தங்கி லிப்ட் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது சொந்த ஊர் விஜயநகரம். அதேபகுதியை சேர்ந்த சிராஜ் உடன் இணைந்து ‘அல்-ஹிந்த் இத்தேஹாதுல்’ என்ற அமைப்பை தொடங்கி 6 பேர் கொண்ட இன்ஸ்டாகிராம் குழுவை உருவாக்கி உள்ளனர். அதன்படி சமீர், சிராஜ் ஆகியோருடன் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த மேலும் 4 இளைஞர்கள் சேர்ந்து, ஐதராபாத்தில் 3 நாட்கள் தங்கி இருந்து குண்டு வெடிப்பு திட்டம் வகுத்துள்ளனர். இதில் சமீர், சிராஜ் ஆகியோர் வெடிகுண்டுகளை தயாரிக்க சவுதி அரேபியாவில் இருந்து உத்தரவுகளை பெற்றுள்ளனர். மேலும் 4 இளைஞர்கள் குண்டு வைக்க ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை அடையாளம் காண உத்தரவுகளை பெற்று அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
யூடியூப் பார்த்து குண்டு தயாரிப்பு;
சவுதி அரேபியாவில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க உத்தரவுகளை பெற்ற சமீர், சிராஜ் ஆகியோர் வெடிபொருட்களை உருவாக்கும் செயல்முறைகளை யூடியூப்பில் பார்த்துள்ளனர். இதற்காக ஆன்லைனில் வெடிபொருட்களை ஆர்டர் செய்துபெற்றனர். தற்போது கைதான இருவரிடம் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டுகள் வைக்க இலக்குகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ள 4 பேரிடம் வெடிகுண்டுகள் வழங்கப்பட்டுள்ளதா? எனவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.