Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஐதராபாத் சார்மினார் பகுதியில் பயங்கர தீ விபத்து: 8 குழந்தைகள் உட்பட 17 பேர் பலி: 4 பேர் படுகாயம்

திருமலை: ஐதராபாத் சார்மினார் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினார் பகுதியில் கிருஷ்ணா என்பவரின் கட்டிடம் உள்ளது. தரைதளத்தில் கிருஷ்ணாவின் நகை கடை உட்பட பல நகை கடைகள் உள்ளன. முதல் மாடியில் கிருஷ்ணாவின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். மிககுறுகலான சாலை உள்ள இந்த பகுதியில் அடுத்தடுத்து வீடு, கடைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் கட்டிடத்தின் தரை தளத்தில் மின்சார மீட்டர்கள் பொருத்தப்பட்ட இடத்தில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. சிறிது நேரத்தில் தீமளமளவென பற்றி எரிய துவங்கியது.

முதல் தளம் வரை புகை மூட்டம் ஏற்பட்டதால் வீட்டில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். கீழே வர உள்ள ஒரே வழியான குறுகலான படிக்கட்டு வழியாக வரமுடியவில்லை. வீட்டில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து பொதுமக்கள் ஐதராபாத் தீயணைப்பு நிலையத்திற்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்றனர். குறுகலான பகுதி என்பதால் தீயணைப்பு வாகனங்கள் சமபவ இடத்தை வந்தடைவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு 5 வாகனங்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைக்கப்பட்ட பிறகு கட்டிடத்துக்குள் சென்று உள்ளே இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். புகை மூட்டத்தால் மயங்கிய நிலையில் இருந்த பலர் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 8 குழந்தைகள் உட்பட 17 பேர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் பிரஹ்லாதன்(70), முன்னி(70), ராஜேந்தர் மோடி(65), சுமித்ரா(60), ஹேமி(7), அபிஷேக்(31), ஷீத்தல்(35), பிரியான்ஷ்(4), இராஜ்(2), ஆருஷ்(3), ரிஷப்(4), பிரதம்(ஒன்றரை வயது), அனுயன்(3), வர்ஷா(35), பங்கஜ் (36), ரஜினி(32), இந்து(4) ஆகியோர் இறந்தனர் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் விடுமுறைக்காக ஐதராபாத்துக்கு வந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் படுகாயமடைந்தவர்களில் 4 பேர் மலக்பேட்டை யசோதா மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா? என போலீசார், தீயணைப்பு துறையினர், மின்சார துறையினர், மாநகர அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் பலியான சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.