இந்திய, சீன உணவுகளின் கூட்டுக்கலவை!
விருந்து என்றாலே அதில் அசைவ பிரியாணி இடம்பெற வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. எத்தனை முறை ருசித்தாலும் மீண்டும் ருசிக்கவேண்டும் என ஏங்க வைப்பதில் பிரியாணிக்கு நிகர் பிரியாணிதான். அந்த அளவுக்கு பிரியாணி மக்களிடையே இன்றியமையாத உணவாக மாறிவிட்டது. பிரியாணியைப் போல சீன வகை உணவுகளும் இன்று பிரபலம் அடைந்து வருகின்றன. அதை அடிப்படையாகக் கொண்டு இந்திய உணவும், சீன உணவும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக்கரனை விஜிபி ராஜேஷ் நகரில் தொடங்கப்பட்டிருக்கிறது கிச்சன் ஸ்டோரிஸ் ரெஸ்டாரண்ட். அதன் உரிமையாளர் மோகன்குமாரைச் சந்தித்தோம். “சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஹோம் இண்டிரியரிங்க் ஒர்க் செய்து வந்தேன். இருந்தபோதிலும் உணவுகளின் மேல் கொண்ட ஆர்வத்தினால் உணவகத்தைத் தொடங்கலாம் என முடிவு செய்தேன். நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பர்களோடு சேர்ந்து பள்ளிக்கரனையிலேயே ஒரு ரெஸ்டாரண்ட்டை நடத்தி வந்தேன்.
ரெஸ்டாரண்ட்க்கு அருகில் சரியான சாலை வசதி இல்லாததால் 26 நாட்களிலேயே அந்த உணவகத்தை மூட வேண்டிய நிலை வந்தது. வேலை செய்து வந்த வட இந்தியர்களும் என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டனர். என்ன செய்வது? என்ற குழப்பம். கால் வைத்து விட்டோம், தொடர்ந்து நடப்போம் என முடிவெடுத்து, மற்றொரு இடத்தில் உணவகத்தை தொடர்ந்து நடத்தலாம் என யோசித்தேன். அதன்படி தனியாக உணவகம் திறந்தவுடன் கொரோனாவால் மீண்டும் ரெஸ்டாரண்டை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டேன். உணவகம் தொடங்கிய சிறிது காலத்திலேயே அதிக சிரமப்பட வேண்டி இருந்தது. இந்த நிலையில் என் கதை தொடர்ந்ததால் எனது கடைக்கு கிச்சன் ஸ்டோரிஸ் என்றே பெயர் வைத்தேன். வழக்கமான உணவகங்களில் இருந்து எங்களுக்கென்று ஒரு தனித்துவம் வேண்டுமென யோசித்தபோது, இந்திய, சீன, அரேபியன் உணவுகள் காம்பினேஷனில் கொடுக்கலாம் என்று தோன்றியது.
அதற்காக சில ஆய்வுகள் செய்தோம். அப்போது, நமது நாட்டு உணவில் இஞ்சி பிரதானமாக இருந்தது. சீன உணவில் சோயா சாஸ் பிரதானமாக இருந்தது. அதனால் பெரும்பாலான உணவுகளில் இஞ்சி மற்றும் சோயா சாஸை சேர்ப்போம். இரண்டு நாடுகளின் உணவு என்பதால், இந்திய உணவில் பிரபலமான ஹைதராபாத் லாலிபாப், ட்ரம் ஸ்டிக் சிக்கன், ஆந்திரா சிக்கன், செட்டிநாடு சிக்கன், பட்டர் சிக்கன் மசாலா, மட்டன் கடாய், செட்டிநாடு ப்ரான் கொடுத்து வருகிறோம். அதேபோல் சீன உணவின் சேஸ்வான் ப்ரான், கோல்டன் ப்ரான் ப்ரை இவற்றுடன் சிக்கன் விங்க்ஸ் பார்பிக்யூ, கான் மெத்தி மலாய், ட்ராகன் சிக்கன் போன்றவற்றை எங்களின் சிக்னேச்சர் டிஷ்ஷாக கொடுக்கிறோம். இதைத் தவிர, இரண்டு வகை உணவிலும் சூப், ஸ்டார்ட்டர், மெயின் டிஷ், டெசர்ட் என நான்கு பாகமாக பிரித்திருக்கிறோம். மேலும், எங்களது அல்டிமேட்டான பேசிகார்ன் மஞ்சூரியன், ட்ராகன் சிக்கன், சைனிஸ் பெப்பர் சிக்கன், சில்லி ஸ்குட் ஆகியவற்றை யுனிக்கான டேஸ்ட்டில் செய்து கொடுக்கிறோம்.
இவை, மிகவும் கிரிஸ்பியாகவும், சுவையாகவும் இருப்பதால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். மேலும், ஷாங்காய் ப்ரைடு ரைஸ், ஹக்கா நூடுல்ஸ், ஸ்குட் பெப்பர் ப்ரையும் கொடுத்து வருகிறோம். இதுபோன்று எங்கள் உணவகத்தில், நூற்றுக்கும் அதிகமான டிஷ்களை தயார் செய்து கொடுக்கிறோம். எங்க பிரியாணிக்கென்று தனி சுவை இருக்கு. அதுக்கு காரணம் நாங்க தேர்ந்தெடுக்குற ஆடு, கோழிதான். 8 கிலோவுக்கு மேல இருக்கிற ஆட்ட நாங்க வாங்குவது கிடையாது. உணவின் டேஸ்ட்டுக்காகவும், வாடிக்கையாளர்களின் உடல் நிலையைக் கவனத்தில் வெச்சும் நேரடியா மீனவர்களிடமிருந்தே நாங்க மீன், இறால் வாங்குறோம். அதுபோல பிரியாணி ரெடி பண்ண தேர்ந்தெடுக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பக்குவம் இருக்கு. வெங்காயம் எந்த அளவுக்கு வேகணும், இஞ்சி பூண்டு எவளோ போடணும், மசாலாவோட அளவு என்னன்னு ஒவ்வொரு செய்முறையிலயும் தனி கவனம் செலுத்துறோம். இங்கே வரும் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை, உணவுக்காக சிறிது நேரம் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்பதுதான்.
ஏனென்றால், சுவையான நன்கு வேகவைத்த உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்பதால்தான் அவ்வாறு கோரிக்கை வைக்கிறோம். இந்தியா, சீனா, அரேபியன் என்று ஒவ்வொரு உணவிற்கென்றும் தனித்தனி மாஸ்டர்ஸ் இருக்காங்க. எல்லாத்தையுமே எங்க ஸ்டைல்ல சுவையா, ஃப்ரெஷ்ஷா கொடுக்கிறோம். ஆன்லைன் மூலமாகவும் உணவுகளை டெலிவரி செய்கிறோம். ஹோட்டலைச் சுற்றி அதிக கல்வி நிறுவனங்கள் இருக்கு. இதனால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தினசரி சாப்பிட வரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இங்கே சாப்பிட வருபவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவது ஹரியாலி சிக்கன் டிக்கா, ப்ரான் டிக்கா, ஆப்கானி தந்தூரி சிக்கன், கார்லிக் நான், பெர்ரி பெர்ரி சவர்மா, க்ராப் லாலிபாப் போன்ற உணவுகளைத்தான். அதனால், சைனீஸ் உணவுகளில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். முன்பு மதிய, இரவு உணவு மட்டும் வழங்கி வந்தோம். தற்போது உணவின் ருசிக்காக அதிக வாடிக்கையாளர்கள் வருவதால் அருகில் உள்ள இடத்தையும் வாடகைக்கு எடுத்து இரவு முழுவதும் உணவகத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்’’ என்கிறார் மோகன்குமார்.
– சுரேந்திரன் ராமமூர்த்தி
டைகர் க்ரிஸ்பி சிக்கன்
தேவையானவை
சிக்கன் – அரை கிலோ
முட்டை – 1
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
கார்ன் பிளார் – 2 தேக்கரண்டி
பிரெட் க்ரம்ஸ் -1 கப்
பச்சை மிளகாய் – 2
மல்லித் தழை – கையளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
சுத்தம் செய்த சிக்கனை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொண்டு, சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் சிக்கனை சேர்த்து அதில் சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், அரைத்த வெங்காய விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக புரட்டிக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக அடித்து, அதனை சிக்கன் கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் கார்ன் பிளார், பாதியளவு பிரெட் க்ரம்ஸ் சேர்த்து மீண்டும் நன்றாக புரட்டிக் கொள்ளவும். தயார் செய்து வைத்துள்ள சிக்கனை மீதமுள்ள பிரெட் க்ரம்ஸில் சேர்த்து புரட்டி எடுத்து அதனை சுமார் அரை மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். பின்னர், அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் பிரிட்ஜில் உள்ள சிக்கனை எடுத்து ஒவ்வொன்றாக போட்டு சிம்மில் வைத்து சிக்கனை பொரித்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக பொரித்த இறால் மீது நறுக்கி வைத்துள்ள மல்லித்தழையை தூவினால் க்ரிஸ்பியான டைகர் க்ரிஸ்பி சிக்கன் தயார்.