Friday, September 13, 2024
Home » ஐதராபாத் வங்கியில் ₹50 லட்சம் மோசடி; 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் நெல்லையில் கைது

ஐதராபாத் வங்கியில் ₹50 லட்சம் மோசடி; 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் நெல்லையில் கைது

by MuthuKumar

நெல்லை: ஐதராபாத் ஸ்டேட் வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டு பல்வேறு மாநிலங்களில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை நெல்லையில் சிபிஐ கைது செய்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஸ்டேட் வங்கியில் சந்துலால் பரதாரி கிளையில் கணினி ஆபரேட்டராக பணி செய்தவர் சலபதிராவ். இவர் எலக்ட்ரானிக் நிறுவனங்களில் போலியான சம்பள பட்டியல் தயார் செய்து ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து 2002ம் ஆண்டு மே 3ம்தேதி சலபதிராவ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பின்னர் தீவிர விசாரணையில் அவருடைய குற்றத்தை உறுதி செய்த சிபிஐ, 2004ம் ஆண்டு டிசம்பரில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்தது. இந்நிலையில் சலபதிராவின் மனைவி ஜூலை 2004ம் ஆண்டு முதல் எனது கணவரை காணவில்லை என காமதிபுரா போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்து தனது கணவர் இறந்து விட்டதாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கிடையே ஏப்ரல் 2013ம் ஆண்டு சலபதிராவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக சிபிஐ அறிவித்து தேடி வந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் தனது அடையாளங்களை மாற்றி பெயரை மாற்றி சலபதிராவ் இருப்பதை கண்டறிந்த சிபிஐ அவரை கைது செய்தது.

அதன்விவரம் வருமாறு
பணமோசடியில் குற்றம் சாட்டப்பட்ட சலபதிராவ் ஐதராபாத்தில் சேலத்திற்கு தப்பி வந்துள்ளார். அங்கு தன் பெயரை வினித்குமார் என மாற்றிக் கொண்டுள்ளார். மேலும், அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனக்கான புதிய அடையாளங்களாக ஆதார் அட்டை உள்ளிட்டவைகளையும் சலபதிராவ் பெற்றுக் கொண்டுள்ளார். இருப்பினும் முதல் மனைவிக்கு பிறந்த மகனுடன் சலபதி ராவ் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதுபோன்ற தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் சிபிஐ அவரை தேடி 2014ம் ஆண்டு சேலம் சென்றபோது, அவர் சேலத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் போபால் பகுதிக்கு சென்ற சலபதி ராவ் அங்கு கடன் மீட்பு முகவராக பணி செய்து வந்துள்ளார். பின்னர் அவர் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் ஒரு பள்ளியில் பணியில் சேர்ந்துள்ள தகவல் கிடைத்து 2016ம் ஆண்டு சிபிஐ அங்கு சென்ற போது, அங்கிருந்தும் சலபதி ராவ் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் சிபிஐயின் தீவிர விசாரணையில், அவுரங்காபாத் பகுதியில் உள்ள வெருள் கிராமத்தில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் விதித்மானந்த தீர்த்தர் என்ற பெயருடன் தனது அடையாள ஆவணங்களை மாற்றி தங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து 2021ம் ஆண்டு வெளியேறி ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து ஜூலை 8ம்தேதி வெளியேறி, நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியில் நண்பர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு வந்த சிபிஐ நேற்று முன்தினம் சலபதிராவை கைது செய்தது. ஐதராபாத் ஸ்டேட் வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டு பல்வேறு மாநிலங்களில் 22 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை நெல்லையில் சிபிஐ கைது செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

eight − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi