சென்னை: வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ராமர் (22), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணை 2017ம் ஆண்டு காதலித்தார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்த வழக்கு பெரம்பலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் ெசய்யப்பட்டது. பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம் ராமருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ராமர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரும் அவரது மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இதை விசாரணை நீதிமன்றம் கவனிக்கு தவறிவிட்டது. எனவே, பெரம்பலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மனைவி மற்றும் குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. குழந்தையுடன் அந்த பெண் ஆஜரானார். அவரிடம் நீதிபதி விசாரித்ததில், தனது கணவர் சிறைக்கு செல்வதற்கு முன்புவரை இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம் என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்துவரும் நிலையில் மனுதாரரை சிறையில் வைப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. இது ஒரு விசித்திரமான வழக்கு. எனவே, மனுதாரருக்கு தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. அவரை விடுதலை செய்ய வேண்டும். சிறையிலிருந்து வந்த 8 வாரத்திற்குள் திருமணத்தை பதிவு செய்து சம்பந்தப்பட்ட போலீசாரிடம் தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.