திருத்தணி: திருத்தணி அருகே கணவரை பிரிந்து வாழும் நிலையில் வீடுபுகுந்து பெண்ணுக்கு குடிபோதையில் தாலி கட்ட முயன்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், புத்தூர் அருகே உள்ள தாழ்மாம்பாபரம் கிராமத்தைச் சேர்ந்த ருத்ரன் என்பவருடன் அதே பகுதியைச் சேர்ந்த இந்து (19) என்ற பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான சில மாதங்களில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள முருக்கம்பட்டில் உள்ள தனது தாத்தா வீட்டில் இந்து தங்கியுள்ளார். இந்நிலையில் முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவரின் மகன் கட்டிட மேஸ்திரியான குபேந்திரன் (30) கடந்த 24ம் தேதி மாலை இந்துவின் தாத்தா வீட்டுக்குள் குடிபோதையில் நுழைந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இந்துவுக்கு அவர் திடீரென தாலி கட்ட முயன்றார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இந்து மற்றும் அவரது தாத்தா, பாட்டி ஆகிய மூவரும் குபேந்திரனை தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த குபேந்திரன் இந்து மற்றும் அவரது தாத்தா, பாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இச்சம்பவம் தொடர்பாக இந்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலர் வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரி குபேந்திரனை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.