தென்காசி: போலீஸ்காரரான கணவருடன் சேர்த்து வைக்கும்படி கோரி அவரது வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி வஉசி நகரை சேர்ந்த சின்னதுரை மகள் குமுதா (23). இவருக்கும் ஆவுடையானூர் அருகே ராயப்பநாடானூரை சேர்ந்த வேலாயுதம் மகன் சுதர்சனுக்கும் (29) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுதர்சன் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் குடும்பம் நடத்தி உள்ளார். பின்னர் சென்னை சென்ற சுதர்சன் அங்கு வீடு பார்த்து விட்டு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
பின்னர் குமுதாவிடம் ‘உன்னை எனக்கு பிடிக்கவில்லை, நான் வேறு பெண்ணை விரும்புகிறேன்’ என கூறியுள்ளார். குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தாய் வீடான கல்லூரணியில் இருந்த குமுதா, சுதர்சன் விடுமுறையில் ஊருக்கு வந்திருப்பதை அறிந்து நேற்று முன்தினம் இரவில் கணவரின் வீட்டு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால், சுதர்சனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். இதனால் விரக்தியடைந்த குமுதா தாய் வீட்டுக்கு திரும்பி அங்கு நேற்று அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.