மும்பை: தனது கணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மற்றவர் துயரத்தில் கொண்டாட்டமா? என்று ஊடகங்களின் மீது கரீனா கபூர் பொரிந்து தள்ளினார். கடந்த ஜனவரி மாதம், பாலிவுட் நடிகர் சைப் அலிகான், மும்பையில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையன் ஒருவனால் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது, அவரது மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் அங்கு இல்லை என்றும், அவரது கணவர் மீதான தாக்குதலின் உண்மையான பின்னணி என்ன என்பது குறித்தும் சில ஊடகங்கள் எழுப்பிய கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த சம்பவம் தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், பல நாட்கள் அந்நியர்கள் யாரோ வீட்டிற்குள் இருப்பது போன்ற ஒருவித அச்ச உணர்வுடன் இருந்ததாகவும் கரீனா குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் கரீனா கபூர் அளித்த பேட்டி ஒன்றில், ‘சைப் அலிகான் விவகாரத்தை ஊடகங்கள் கையாண்ட விதம் மிகவும் அருவருப்பாக இருந்தது. அவர்கள் மீதான கோபத்தை விட எனக்கு வேறு விதமான உணர்வுதான் ஏற்பட்டது.
இதுதான் மனிதமா? என்று தோன்றியது. இத்தகைய செய்தியைதான் மக்கள் விரும்புகிறார்களா? மற்றவர்களின் துயரத்தைக் கொண்டாடுவது தான் உங்கள் வேலையா? கடினமான நேரத்தில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராக வந்த ட்ரோல்களும், கருத்துக்களும் அதிர்ச்சியளித்தன. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், செய்திக்கு அப்பால் மனிதாபிமானம் என்ற ஒன்று உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.