பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த சுந்தர சோழபுரம், மகாத்மா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (36), டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கற்பகம் (32). இவர்களுக்கு ராமு (16) என்ற மகனும், ஆனந்தி (13) என்ற மகளும் உள்ளனர். கடந்த சில வாரங்களாக சுரேஷ் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமுற்ற கற்பகம் தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சில நாட்களுக்கு முன்பு முகப்பேரில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.
இந்தநிலையில் சுரேஷை பார்ப்பதற்காக நேற்று அவரது வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது சுரேஷ் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுரேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவி கோபித்துகொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் மன உளைச்சலில் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.