நெல்லை : கணவரால் கைவிடப்பட்ட பெண், தன் குழந்தைகளுக்கு வாழ்வாதாரம் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம், கீழப்பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (38). இவருக்கும், திருச்சி மாவட்டம் கருப்பம்பட்டியைச் சேர்ந்த கர்ணனுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து. இவர்களுக்கு கமலேஷ் (13), அனுஷா (7) அனுஸ்ரீ(7) என 3 குழந்தைகள் உள்ளனர்.
கர்ணன் திருச்சியில் லாரி டிரைவராக உள்ளார். இந்நிலையில் கர்ணன் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அவர் தன்னை வீட்டை விட்டு விரட்டியதாகவும் கூறி, தனது தாய் வீடான கீழப்பாப்பாக்குடிக்கு வந்த பரமேஸ்வரி, நேற்று தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தார்.
கலெக்டர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து அவர் திடீரென்று தர்ணாவில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட போலீசார் ஓடி வந்து அவரை வாசலில் இருந்து அகற்றி கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து பரமேஸ்வரி கூறுகையில், ‘‘திருச்சியில் கடந்த ஏப்ரல் மாதம் வரை நான் என் கணவரோடும், மூன்று குழந்தைகளோடும் வசித்து வந்தேன். என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் தினமும் என்னை அடிப்பதும், சூடு வைத்துக் கொடுமைப்படுத்துவதுமாக இருந்தார்.
இதுகுறித்து திருச்சி கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளேன். கணவரின் கொடுமைகள் தொடர்ந்தால் வேறு வழியின்றி கடந்த மே மாதம் என்னுடைய சொந்த ஊருக்கு வந்து விட்டேன்.எனது குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு உரிய பணம் கேட்டு தொடர்ந்து போராடி வருகிறேன். இதுகுறித்து நெல்லை எஸ்பி அலுவலகத்திலும், பாப்பாக்குடி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். வாழ வழியின்றி தவிக்கும் எங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதார பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்.’’ என்றார்.