திருவொற்றியூர்: திருவொற்றியூர், கேவிகே குப்பத்தைச் சேர்ந்தவர் உலகநாதன்(27), பெயின்டர். இவரது மனைவி லீனா(24), அண்ணாநகரில் உள்ள மாலில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இரண்டு தினங்களுக்கு முன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனைவி மீது சந்தேகப்பட்டு, மது போதையில் இருந்த உலகநாதன் லீனாவை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு எண்ணூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு லீனா சென்று விட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மனைவியை பார்க்க சென்ற உலகநாதன், தாழங்குப்பம், சத்தியவாணி முத்துநகர் 11வது தெரு அருகே வருமாறு கூறியுள்ளார். அங்கே வந்தவுடன் வீட்டிற்கு வரும்படி மனைவியை அழைத்துள்ளார். வரமுடியாது என கூறவே, தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உலகநாதன், தான் ஏற்கனவே கொண்டுவந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து லீனா வின் தலையில் வெட்டியுள்ளார்.
இதில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக, மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த எண்ணூர் போலீசார், கத்தியால் மனைவியை வெட்டிய உலகநாதனை கைது செய்தனர். பிறகு சிறையில் அடைத்தனர்.