Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மனக் கவலைகளைப் போக்கிடும் மகர மாதம்!

மாதங்கள் 12! ஒவ்வொரு மாதத்திற்கும் ஓர் விசேஷ சிறப்பும், சக்தியும் உள்ளன. மகர மாதத்திற்கென்று (தை மாதம்) தன்னிகரற்ற, தெய்வீகப் பெருமை உண்டு!!"தட்சிணாயனம்" -எனப்படும் தேவர்கள் உலகங்களில், ஆறு மாதக் கால இரவு நேரம் முடிந்து, "உத்தராயனம்" -எனப்படும் பகல் பொழுது ஆரம்பமாகும் மாதமே, மகர மாதம் எனவும், தை மாதம் எனவும் பூஜிக்கப்படுகின்றது. தட்சிணாயனம் காலத்தில், "மோட்சம்" எனப்படும் தேவர்களின் சொர்க்க உலகம், பிரம்ம தேவரின் சத்திய உலகம், பகவான் ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வைகுண்டம், ஸ்ரீ பார்வதி - பரமேஸ்வரனின் திருக்கையிலாயம், கந்தவர்களின் உலகம் ஆகியவற்றிற்கு இரவு நேரமாகும்.ஆறு மாத இரவுக் காலம் முடிந்து, பகல் ஆரம்பமாகும் தினமே, "தை" மாதப் பிறப்பாகும். இதனையே "உத்தராயனப் புண்ணிய காலம்" எனவும், "மகர சங்கராந்தி" எனவும் பூஜிக்கிறோம். "சொர்க்கம்" -எனப்படும் தேவர்கள் உலகின் பொற்கதவுகள் திறக்கப்படும் தினமும் அன்றுதான்!

"உத்தராயனம்" -எனப்படும் ஆறு மாதக் காலத்திற்கு முந்தைய ஆறு மாதங்கள் "தட்சிணாயனம்" எனப்படும். "தட்சிணாயன" காலத்தில் மரணமடையும் ஜீவன்கள், தேவர்கள் உலகிலுள்ள "வைதரணி" நதியின் கரையில் இந்த உத்தராயன புண்ணிய தினத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பதை சூட்சும கிரந்தங்கள் விவரித்துள்ளன.நமது பித்ருக்களை, நாம் தர்ப்பணம், திதி ஆகியவற்றின் மூலம் பூஜிக்கும் பலன்களை அவர்களிடம் எடுத்துச் சென்று சேர்ப்பது, பித்ருகாரகரான சூரிய பகவானேயாவார். ஆதலால்தான், பொங்கல் தினத்தன்று, சூரியனுக்கு பொங்கல் படைத்து, பூஜித்து வருகிறோம்.உத்தராயன புண்ணிய தினத்தன்று, சூரியனின் கிரணங்களின் மூலம் சுவர்ணமயமான (தங்கம்) விமானங்களின்மூலம் தங்கள், தங்கள் புண்ணிய உலகங்களுக்கு நம் மூதாதையர்கள் செல்வதாக, சூட்சும கிரந்தங்கள் விவரித்துள்ளன.

அன்றே தேவர்கள், மகரிஷிகள், சித்த மகா புருஷர்கள், சிரஞ்சீவிகள் (மரணமில்லாத பெரியோர்கள்) ஆகியோர் "தேவ கங்கையில்" புனித நீராடி, சூரிய பகவானுக்கு காயத்ரி மகா மந்திரத்தைக் கூறி, அர்க்கியம் கொடுப்பதாக புராதன நூல்கள் கூறுகின்றன. அன்று பித்ருக்களுக்கு (மறைந்த முன்னோர்கள்), திதி தர்ப்பணம் மூலம் பூஜிப்பது, குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் நல்வாழ்வைப் பெற்றுத் தரும்.அனைத்து தேவதைகளும், பசுக்களின் சரீரங்களில் எழுந்தருளியிருப்பதாக, புண்ணிய நூல்கள் விவரித்துள்ளன. ஆதலால்தான், பொங்கல் தினத்திற்கு மறுநாளான மாட்டுப் பொங்கல் தினத்தன்று, பசுக்களையும், காளைகளையும் அவற்றின் கன்றுகளையும் புனித நீராட்டி, புஷ்பங்களினால் அலங்கரித்து, பூஜித்து வருகிறோம். அன்றைக்கு மறுநாளே குடும்பத்தின் பெரியோர்களை நேரில் சென்று வணங்கி, அவர்களின் ஆசியைப் பெறுகிறோம். பெறற்கரிது பெரியோர்களின் ஆசி! அந்தத் தினத்தையே காணும் ெபாங்கல் எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.

நமக்கு ஆேராக்கியத்தையும், ஏராளமான பல நன்மைகளையும் அளித்தருளும் சூரிய பகவானையும், பொங்கல் தினத்தன்று, பூஜித்து வருகிறோம்.மகத்தான, தெய்வீகப் பெருமை பெற்ற, இந்தத் தை மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய தினங்களை இனி பார்ப்போம்!

தை மாதம்

தை 1 (14-1-2025) : மகர சங்கராந்தி! - பொங்கல் பண்டிகை - உத்தராயனப் புண்ணியக் காலம்.

தை 2 (15-1-2025) : மாட்டுப் பொங்கல் - பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும் நீராட்டி, அலங்கரித்து, பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.

தை 3 (16-1-2025) : காணும் பொங்கல். பெரியோர்கள், உறவினர்கள் ஆகியோரின் ஆசி பெறுதல்.

தை 4 (17-1-2025 : மக நட்சத்திரத்தில் அவதரித்த, சித்த மகா புருஷர் சிவவாக்கியரின் அவதாரப் புண்ணிய தினம். பிறக்கும்போதே, அழுகைக் குரலும், "சிவ... சிவ...!" என்ற தொனியில் இருந்தமையாலும், தும்மினாலும், "சிவ...

சிவ...!" என்ற திருநாமமே இவருடைய திருவாக்கிலிருந்து தாமாகவே ஒலித்தமையால், இவரின் இயற்பெயரே சிவவாக்கியர் என்றாயிற்று.எவ்வளவுதான் அறிவுஜீவியாக இருந்தாலும், அஞ்ஞானமெனும் இருளை அகற்றிட - தனக்குத் தகுந்த குரு-என்னும் அகல்-ஒளிவிளக்கு கிடைத்திட பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். முடிவில் ஒரு குருவைக் கண்டு மனமகிழ்ந்த அவருக்கு, அம்மகிழ்ச்சி சொற்ப காலமே நீடித்தது. காரணம், அந்தக் குருவானவர் சமஸ்கிருதத்திலேயே அனைத்தும் சொல்லிக் கொடுத்தமையால், வேறொரு குருவைத் தேடியலைந்து, காசி சேத்திரத்தை அடைந்தார்! அங்கு ஒரு செருப்பு தைப்பவரிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுமாறு பணிந்து நின்றார். சாதாரண செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த அவரோ, மிகப் பெரிய சித்தமகா புருஷர். உடனேயே சிஷ்யனாக ஏற்றுக் கொண்டுவிடாமல், சோதனை செய்யும் விதமாக, தன் கைப் பையிலிருந்த தங்கக் காசுகள் சிலவற்றைக் கொடுத்து, கங்கை நதியிடம் கொடுத்துவிட்டு வருமாறு பணித்தார்.

பவளமென விரல் நகங்களும்...!

கங்கைக் கரையை அடைந்த சிவவாக்கியர், "எனது குருநாதர், இந்தத் தங்கக் காசுகளை தங்களிடம் தரச் சொன்னார்...!" என்றதுதான் தாமதம், கங்கைப் பிரவாகத்திலிருந்து, அரைத்த சந்தனக் கட்டை நிறத்தையொத்த, தங்க வளையல்களையணிந்த இருதிருக்கரங்கள் வெளிப்பட்டு, அந்தத் தங்கக் காசுகளைப் பெற்றுக்கொண்டு நீரில் மறைந்தது! பின்னர், தன் குருநாதரை அடைந்தார். செருப்பு தைப்பவரோ, சிவவாக்கியரைப் பார்த்து, "நான் கொடுத்த தங்கக் காசுகளை திரும்பப் பெற்றுக் கொண்டுவா...!" என்றவுடன், மீண்டும் கங்கைக் கரையை அடைந்து, தான் கொடுத்த தங்கக் காசுகளைத் திரும்பத் தருமாறு பணிந்தார், சிவவாக்கியர். கங்கைப் பிரவாகத்தினூடே இரண்டு அழகிய திருக்கரங்கள் தோன்றி, தங்கக் காசுகளைத் திரும்பத் தரும்போது, பவளமென விரல் நகங்களையும், பசுந்தளிர் போன்ற வளைக் கரங்களையும் கண்டு மோகித்து, தன்னிலை மறந்து, அத்திருக்கரங்களை ஸ்பரிசித்தார்!! தங்கக் காசுகளைப் பெற்றுக்கொண்டு, தன் குருவிடம் சமர்ப்பித்தவுடன், தன் சிஷ்யனின் உள்ளக்கிடக்கை உணர்ந்த குரு, "உடனடியாக திருமணம் செய்துகொண்டு இல்லற தர்ம கடமைகளைச் செய்துவரும்படி" உத்தரவிட, "எனக்குரிய இல்லாளை எங்கனம் கண்டறிவது?" என வினவ, குருவானவர், தன் காலடி மண்னையும், எட்டிக்காயாகக் கசக்கும் பேய்ச் சுரைக்காயையும் கொடுத்து, "இவ்விரண்டையும் எந்தப் பெண், உனக்கு சமைத்துக் கொடுக்கின்றாளோ அவளே உனக்குகந்த மனையாளாகக் கொள்ளுமாறு" பணித்தார். சிவவாக்கியரின் உடல் அமைப்பையும், வனப்பையும் கண்ட பெண்கள் பலர் மணம் புரிய விழைந்தனர். அவர்கள் அனைவரிடமும் மண்னையும், பேய்ச் சுரைக்காயையும் கொடுத்து, சமைக்கச் சொல்ல, அப்பெண்கள் அனைவரும் கண்களை விழித்தவாறு, விலகிச் சென்றனர். ஊரின் ஒதுக்குப்புறச் சாலையில் ஒரு சமூதாயத்தினர்கள் கூடாரமிட்்டிருந்தார்கள். அவர்களில் ஒரு கன்னிப் பெண்ணைக் கண்டு, "எனக்குப் பசிக்கிறது; இந்த மண்னையும், பேய்ச் சுரைக்காயையும் சமைத்துத் தா!" -எனக் கூறக்கேட்ட அப்பெண்ணும் மறுப்பேதும் கூறாமல், சமைத்துத் தர, கசப்பு சுரைக்காய் இனித்தது. மணலோ அன்றலர்ந்த மல்லிகை மலரையொத்த சாதமாக மலர்ந்தது. அப்பெண்ணின் பெற்றோரிடம் அவர்களின் மகளை மணக்க விரும்புவதைச் சொன்னவுடன், அவர்களும், மணமுடித்தால், தங்கள் சமூக வழக்கப்படி தங்கள் கூடவே இருவரும் இருக்க வேண்டும்; தங்களை விட்டுப் பிரியக்கூடாது என்ற நிபந்தனையையும் ஏற்றார், சிவவாக்கியர்! அனைவரும் தினந்தோறும் காடுகளுக்குச் சென்று, மூங்கில் மரங்களை வெட்டி, கூடை, முறம், மூங்கில் தட்டு செய்து விற்றுப் பிழைத்து வந்தனர்.

வாழ்க்கை இனிமையாகக் கழிந்துகொண்டிருந்த சமயத்தில், திரிலோக சஞ்சாரியான, கொங்கண சித்தர், வறுமையில் துயரப்படும் சிவவாக்கியரின் துன்பத்தைப் போக்க எண்ணி, (அல்லது சிவவாக்கியரின் தர்மபத்தினியின் சிறப்பை வெளியுலகத்திற்குக் காட்டவோ), சிவவாக்கியர் இல்லாத சமயத்தில், அவரின் மனைவியிடத்தில் ஒரு பாத்திரத்தைக் கேட்டுப் பெற்று, அதைத் தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டுச் சென்றார். பத்தரைமாற்றுத் தங்கமாய் ஜொலிக்கும் அப்பாத்திரத்தைக் கையில் வைத்து அழகு பார்த்திருந்ததைக் கண்ணுற்ற சிவவாக்கியர், மற்ற பெண்களைப் போல, தன் மனைவிக்கும் தங்கத்தின் மீது "மாளாக் காதல்" உண்டாயிற்றோ - என்பதைப் பரிசோதிக்கவோ - தன் மனைவியின் நிர்மலமான மனத்தை இவ்வையகத்திற்குக் காண்பிப்பதற்காகவோ, தன் மனைவியை அழைத்து, அருகேயிருந்த துணி துவைக்கும் கல்லின்மீது தன் வாயிலிருந்து எச்சிலை உமிழ்ந்தார். பிறகு தன் மனைவியைப் பார்த்து, அவ்விடத்தைத் தண்ணீர் ஊற்றிக் கழுவிடுமாறு பணித்தார். அதனைச் சிரமேற்கொண்ட சிவவாக்கியரின் மனைவி, அவ்விடத்தைத் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட, துவைக்கும் கல் முழுவதுமாக தங்கமயமாக ஜொலித்தது! அதைக் கண்டும் எவ்வித மனச் சஞ்சலமும் இல்லாமல் வழக்கம்போலவே தன் வாழ்க்கைத் துணை இருப்பதைக் கண்ட சிவவாக்கியர், இவளுக்கு தங்கத்தின் மீது பற்றில்லை என்பதையறிந்து, மகிழ்ந்தார்.

வழக்கம்போல், காட்டிற்குச் சென்று, மூங்கிலை வெட்டும்போது, அதனுள்ளிருந்து, சொக்கத் தங்கத் துகள்கள் வெளியே ெகாட்டத் துவங்கியதைக் கண்ட சிவவாக்கியர், "சிவ, சிவ! தங்கம் உருவில் எமன் வந்துவிட்டானே!! சிவ...சிவ" -என்று அலறியடித்து ஓடினார். வழியில் கண்ட நான்கு பேர்கள், ஆர்வக்கோளாறு காரணமாக, நாம் அந்த எமனைக் காணலாம் எனக் கூறிப் புறப்பட்டனர்! அங்கு அவர்கள் கண்ட காட்சி, உடைந்த மூங்கில் மரத்திலிருந்து தங்கத் துகள்கள் கொட்டிக்கொண்டிருப்பதைக் கண்டனர்! அனைவரும் நம் வறுமை நீங்கியது; இதை அனைவரும் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று தங்களால் இயன்ற அளவு தங்கத் துகள்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டனர். நேரம் போனதே தெரியவில்லை. "இரவு நேரமாகிவிட்டது. ஆகவே நீங்கள் இருவர் மட்டும் இம்மரத்தினடியில் தங்கத்தைப் பாதுகாத்துக்கொண்டு இருங்கள்; நாங்கள் இருவரும் வெளியில் சென்று உங்களுக்கு சாப்பாடு வாங்கிவருகிறோம்!" எனக்கூறிப் புறப்பட்டுச் சென்று சாப்பாடு வாங்கியவுடன், இருவருக்கும் ஒரு யோசனை உதயமாயிற்று. "நாமெதற்கு நான்கு பங்காகப் பிரித்துத் தர வேண்டும்? அவ்விருவரையும் கொன்றுவிட்டால்...! இருபங்காக்கி இருவர் மட்டுமே மொத்த தங்கத்தூள்களையும் எடுத்துக்கொள்ளலாமே?" என்ற யோசனையை இருவரும் ஒருமித்த மனத்துடன் ஏற்று, தங்கள் உணவை அருந்திவிட்டு, காட்டில் காத்திருக்கும் இருவருடைய உணவில் விஷத்தைக் கலந்து கொண்டுவந்தனர். தங்கத்தைப் பாதுகாத்துக் கொண்டிருந்தவர்களும், லேசுப்பட்டவர்கள் இல்லை! இதே போன்று வஞ்சக சூழ்ச்சி எண்ணத்தில் தான் திட்டமிட்டிருந்தனர்!!உணவுடன் வந்தவர்களைக் கொன்றுவிட்டு, விஷம் கலந்த உணவு என்றறியாமலேயே, உணவைச் சுவைத்துச் சாப்பிட்டு மாண்டனர்.

மறுநாள் காலை, வழக்கம்போல் மூங்கில் மரங்களை வெட்டிக் கொண்டுவரச் சென்ற சிவவாக்கியர், நான்கு உடல்களைக் கண்டு, "நேற்றே சொன்னேன், எமன் வந்துவிட்டானென்று... கேட்பார் யாருமில்லையே!" என்றார் வருத்தத்துடன்.இவருடைய பாடல்கள் அனைத்தும், அறிவுப்பூர்வமாகவும், "ஹரியும், ஹரனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு!" எனும் பொருள்படவும், "சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்எந்தை ராம, ராம, ராம, ராம, ராம, ராம வென்னும் நாமமே" என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது. இவரது பாடல்களில் பகுத்தறிவு மிகுந்திருக்கும். கும்பகோணத்தில், இன்றளவும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் இவரது ஜீவசமாதியில் அனைவரும் சென்று தரிசித்து, (இயலாதவர்கள், சித்த பெருமானை மனத்தளவில் நினைத்து வணங்கி உங்கள் வீட்டுப் பூஜையறையில்) நெய் தீபம் ஏற்றி வைத்து, மனதார அவரை வேண்டி நின்றால், நம்முடைய தீராத துன்பங்களனைத்தும், தீயினிற் தூசாவது மட்டுமன்றி, உங்களது வீட்டில் அழகும், அறிவும் நிறைந்த குழந்தைச் செல்வங்கள், பிறந்து சுபீட்சத்துடன்கூடிய நல்வாழ்வும், லட்சுமி கடாட்சத்துடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

தை 5 (18-1-2025 : திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை தினம்.

தை 7 (20-1-2025) : திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளின் அவதார தினம்.

தை 16 (29-1-2025) : தை அமாவாசை - பித்ருக்களை ஆராதிக்க வேண்டிய புண்ணிய தினம்.

தை 21 (3-2-2025) : சஷ்டி விரதம்.

தை 22 (4-2-2025) : ரத சப்தமி - சூரிய பகவான் திசை திரும்பும் தினம். மகான் காச்யப முனிசிரேஷ்டரின் புதல்வனும், தனது ஒளிவெள்ளத்தின் மூலம் இருளைப் போக்குபவனும், எல்லா இடத்திலும் வியாபிப்பவனும், ஆனால், சத்தியத்தில் நிலைபெற்று இருப்போனும், சிவந்த நிறத்தையுடையோனும், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவும், மானிடர்க்கு ஆத்மபலத்தை அளித்தருள்பவனும், பித்ருகாரகராகப் பூஜிக்கப்படுபவரும், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் அதிபலம் பெற்றிருப்பின்,"ராஜாங்க" வாழ்வை அளித்தருள்பவனும், அக்னி பகவானை அதிதேவதையாகக் கொண்டவனும், உச்ச வீடு மேஷராசியாகவும், நீச்ச வீடு துலாம் ராசியாகவும், சொந்த வீடு சிம்மராசியாகவும் ரிஷபம், மகரம், கும்ப ராசி பகை வீடுகளாகக் கொண்டவனுமாகிய சூரியபகவானின் ஜெயந்தி. இந்த நன்னாளில் கோயிலுக்குச் சென்று, சூரிய பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் தருவித்து, சிவப்பு மலர்களால் அர்ச்சித்து, ஒரு அகல்விளக்கில் பசுநெய் தீபம் ஏற்றி வைத்தால், உங்கள் ஜாதகத்தில் சூரிய தோஷம் ஏதும் இருப்பின் அது அடியோடு விலகி, நன்மைபயக்கும்.

தை 24 (6-2-2025) : தை கிருத்திகை விரதம்.

தை 29 (11-2-2025) : தைப் பூசம்,பௌர்ணமி.

இனி, இந்தத் தைப் புண்ணிய மாதம் அளிக்கவுள்ள பலா பலன்களை கிரக சஞ்சாரங்களை சுத்தமாகக் கணித்து எமது "தினகரன்" வாசக அன்பர்களுக்குக் கூறியுள்ளோம். செய்வதற்கு மிகவும் எளிதான பரிகாரங்களையும், மிகப் பழமையான புராதன சுவடிகளிலிருந்து எடுத்து உங்களுக்குத் தந்திருக்கின்றோம். உடனுக்குடன் பலனளிப்பவை. கடைபிடித்து வருமாறு, அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.