பெத்தோவான் உலகப் புகழ்பெற்ற பியானா இசைக்கலைஞர். அவரது கச்சேரி முடிந்ததும் ஒரு பெண்மணி ஓடிவந்து பியானோ வாசித்த அவர் இரு கரங்களையும் இறுகப்பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டார். பின்னர் இந்த கைகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட விசேஷமான கைகள் என்றபடி கைகளை முத்தமிட்டாள்,பெத்தோவன் சிரித்தபடி பெண்மணியே ஒரு நாளைக்கு 18 மணி நேரம் விதம், நாள் கணக்கில், மாதக்கணக்கில் ஏன் வருட கணக்கில் வாசித்துப் பழகினால் உங்கள் கைகளும் கடவுளின் ஆசி பெற்ற கைகளாக ஆகிவிடும் என்றார். எதுவுமே பயிற்சியும் முயற்சியும் இருந்தால் சாதிக்கலாம் என்பது இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.ஆபிரகாம் லிங்கன் புத்தக ஆர்வலர். அறிவு பெற அதுவே அதிகம் உதவும் என்று வெறிகொண்டு புத்தகங்களை தேடுவார். ஒருமுறை ஆங்கில இலக்கணம் பற்றிய நூல் ஒன்றை படிப்பதற்காக கிர்காம் என்ற ஊருக்கு 20 மைல்கள் நடந்தே சென்று வாங்கி வந்து படித்து தன்னுடைய அறிவை வளர்த்துக் கொண்டுள்ளார். வழக்கறிஞரான அவர் ஒருமுறை ஜான்பெக்கன் என்கிற புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞர் வாதத்திறனை நேரில் காண 34 மைல்கள் நடந்து போய் பார்த்தார் என்று அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. உழைக்காமல் எதுவுமே சாத்தியம் இல்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.கடினமான உழைப்பு அத்துடன் முயற்சியுடன் கூடிய பயிற்சி இருந்தால் எத்தகைய தடைகளையும் தகர்த்தெறிந்து சாதிக்கலாம் என்பது சாதனையாளர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.
கொச்சியை அடுத்த எரூரைச் சேர்ந்தவர் சோபியா. இவரது இளமைப் பருவம் சவால் நிறைந்ததாகவே இருந்தது.இவர் பிறவியிலிருந்து வாய் பேச இயலாத, செவித்திறனும் அற்ற பெண்.பள்ளிக்கூடங்களில் இவரை சேர்த்துக் கொள்ள மறுத்தனர். இவரது சகோதரர் ரிச்சர்ட்டுக்கும் சோபியாவுக்கு இருந்த அதே பிறவிக்குறைபாடுகள் இருந்தன. ஒரு நேர்காணலில் இவர்களைப் பற்றி பேசும்போது குறைபாடுகளுக்கு நாங்களோ அல்லது எனது குழந்தைகளோ காரணம் இல்லை. அவர்கள் இப்படி பிறந்து வீட்டதற்கு யாரையும் பலி சொல்ல முடியாது. ஆனால் மக்கள் எங்களை கேலி செய்தனர். நாங்கள் செய்த பாவம்தான் இதற்குக் காரணம் என்று கதை கட்டினர்என்கிறார் சோபியாவின் தந்தை.சோபியா பிறந்து பத்து மாதங்களாகும் போது தான் இந்த குறை இருப்பதை பெற்றோர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். அதன் பிறகு இவர் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவருக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர
பாடுபட்டு இருக்கின்றனர்.
சோபியா கேரளாவின் ஆல்வேயில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பிஏ பட்டம் பெற்றிருக்கின்றார். இவரது குறைபாடுகள் கல்வி கற்பதற்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. தற்போது கொண்டாடப்படும் ஒரு மாடலாகவும், விளையாட்டு வீராங்கனையாகவும் சோபியா விளங்குகின்றார்.மற்ற எல்லாக் குழந்தைகளையும் போல தான் அவளையும் வளர்த்தோம். ஆரம்பத்தில் வீட்டிலேயே வைத்து அவளுக்கு கல்வி கற்பித்தோம். பிறகு சாதாரண பள்ளி ஒன்றில் அவளை சேர்த்து அவளுக்கு நாங்களே பயிற்சி அளித்தோம். அவரது லட்சியங்கள் அனைத்தும் நிறைவேற பக்கபலமாக இருந்தோம். அது அவரது தன்னம்பிக்கையை வளர்த்தது என்கின்றார் சோபியாவின் தாய்.துருதுருவென்று விளையாடிக் கொண்டிருந்த சோபியா மாடலிங் துறையிலும் ஈடுபட விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.அனைவரது முயற்சியின் விளைவாக இன்றைக்கு புகழ் பெற்ற மாடலாக சோபியா திகழ்கிறார்.அழகிப் போட்டிகள் பலவற்றிலும் கலந்து பரிசுகள் பெற்று அசத்தி வருகிறார்.
2014 ஆம் ஆண்டு காது கேளாத,வாய் பேசாதோருக்கான மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். தனியார்தொலைக்காட்சியின் சூப்பர் மாடல் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பலரது பாராட்டுகளையும் பெற்று இருக்கின்றார். இதில் கலந்து கொண்ட இதர போட்டியாளர்கள் அனைவரும் எவ்விதக் குறைபாடு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சோபியா நடனமும் பயின்று இருக்கின்றார் பெஸ்ட் விஷஸ் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாகவும் உருவாகி இருக்கின்றார்.விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உள்ள சோபியா மாநில அளவில் எட்டு முறை சாம்பியன் பட்டம் பெற்று இருக்கிறார். மூன்று முறை தேசிய அளவிலான குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் சாம்பியனாக வெற்றி பெற்றிருக்கின்றார். பல சர்வதேசப் போட்டிகளிலும் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்பட்டு இருக்கின்றார்.இறைவன் ஒரு கதவை சாத்தினால் நிச்சயம் வேறொரு கதவை திறப்பார் என்பது சோபியாவின் வாழ்க்கையை பார்க்கும் போது நமக்கு உணர்த்துகின்றது. பிறவியில் இருந்தே வாய்பேச இயலாத, செவித்திறனும் அற்ற ஒரு பெண் மிகச்சிறந்த மாடலாகவும், வெற்றிகள் பல பெற்ற தடகள வீரராகவும், நடிகையாகவும் இருப்பது வியப்புக்கும், பாராட்டுதலுக்கும் உரியது தானே.எதையும் செய்யக்கூடிய ஆற்றலும், முயற்சியும் உங்களிடம் இருந்து விட்டால் உங்கள் பாதையில் எதிர்ப்படும் தடைகளை உங்களால் அகற்றிக் கொள்ள முடியும்.உங்களாலும் நிச்சயம் சாதிக்க முடியும்!