‘‘கவர்னர் பதவி தருவதாக ஆசைக்காட்டி ஏமாற்றியதால் மாஜி எம்எல்ஏ ஒருத்தர் இருக்கும் இடம் தெரியாமல் ஒதுங்கிவிட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தை சேர்ந்தவர் நான்கெழுத்து பெயரை கொண்ட மாஜி எம்எல்ஏ. இவர் போகாத கட்சி கிடையாது. ஆளும் கட்சியில் இருந்து, கோயம்பேடு கட்சி, தற்போது தாமரை கட்சியில் ஐக்கியமாகி இருக்கிறார். கட்சியில் ஐபிஎஸ் நிர்வாகியிடம் நெருக்கமாக இருந்த நிலையில், மக்களவை தேர்தலின்போது சீட்டு கொடுக்க முன் வந்தார்களாம்.
ஆனால் எனக்கு வயதாகிவிட்டது, தேர்தலில் நிற்க முடியாது. ஏதாவது ஒரு சிறிய மாநிலத்தில் கவர்னர் பதவி கிடைத்தால் போதும், இதற்காக பல கோடிகளை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்னு கூறியிருந்தாராம்.. ஐபிஎஸ் ஆபீசரோ வெயிட் பண்ணுங்க, எலக்சன் முடிந்ததும் பார்த்துக்கலாம் என்றாராம்.. ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தாமரை கட்சி தோல்வியை கண்டதால் மாஜி எம்எல்ஏ கனவு தவிடுபொடியாகிவிட்டதாம்.. சமீபத்தில் வெளியான புதிய கவர்னர் நியமன பட்டியலை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்திருக்கிறாராம்..
இதனால் சமீப நாட்களாக தாமரை கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்கவில்லையாம்.. குறிப்பாக சொந்த மாவட்டமான புரம் மாவட்டத்தில் தொகுதி வாரியாக கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணி போன்ற நிகழ்ச்சிகள் நடந்துவரும் நிலையில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் புறக்கணித்து இருக்கும் இடம் தெரியாமல் உள்ளாராம்.. ஐபிஎஸ் ஆபீசரோ, என் பதவியை தக்க வைத்தால் போதும். இதில் உனக்கு எங்கே சிபாரிசுக்கு செல்வதுனு கூறியதால் சோர்ந்து போய் கிடக்கிறாராம்..
இதுதான் நல்ல சந்தர்ப்பம்னு இவருக்கு போட்டியாக இருந்த மாவட்ட தலைவரான மற்றொரு மாஜி எம்எல்ஏ, மாவட்ட நிர்வாகிகளை தனது கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அதிரடி காட்டி வரும் புதிய கலெக்டரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் பல்வேறு அதிரடி காட்டி வருகிறாராம்.. தினசரி பீல்டு இன்ஸ்பெக்ஷன் முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்..
காலையில் அலுவலகம் வரும் முன்னர் ஏதேனும் ஒரு பகுதிக்கு ஆய்வுக்கு சென்று விட்டுதான் அலுவலகத்திற்கே வருகிறாராம்.. கூடவே பிற துறைகளின் தலைவர்களும் இதுபோன்று ஆய்வு பணிக்கு செல்ல வேண்டும்னு வலியுறுத்த வேற செய்கிறாராம். இதுபோக கலெக்டரின் தனி கிளர்க் ஆக கடந்த 15 ஆண்டுகளாக டெபுடேஷனில் தொடர்ந்து பணியாற்றி வந்தவரை அப்பணியில் இருந்து விடுவித்து மீண்டும் பேரூராட்சி அலுவலக பணிக்கே அனுப்பி இருக்கிறாரு.. தனி கிளர்க் ஆக இப்பணிக்கு புதிதாக 2 பேரை தேர்வு செய்துள்ளாராம்..
இவரது அதிரடி நடவடிக்கைகள் ஒருபுறம் தொடர வருவாய்துறையினரோ அலுவலக நேரம் கடந்தும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கடிதம் கொடுத்திருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நூறு ஏக்கர் அரசு நில மோசடியில் சிக்கியவர் கிராமமே வியக்கும் வகையில் பிரமாண்ட விழா நடத்தி மொய் வசூல் நடத்தியிருக்கிறாரே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ மாவட்டத்தில், கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது 100 ஏக்கர் அரசு நில மோசடியில் சிக்கி சிறைக்கு சென்றவர் அன்னமானவர். ஜாமீனில் வெளியே வந்தவர் தற்போது பிக்பாண்ட் ஊரின் ஒன்றிய இலைக்கட்சி செயலாளராக இருக்கிறார். பலாப்பழக்காரருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். இவர் மோசடியாக பத்திரப்பதிவு செய்த 100 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி இருக்கு.. இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடியால் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், இவருக்கு அதிக அளவில் சொத்துகள் குவிந்தது குறித்தும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்துள்ளது குறித்தும் போலீசார் விசாரணையை திருப்பியுள்ளாங்களாம்..
இதில் இலைக்கட்சி பிரமுகர்கள் மட்டுமின்றி, இதற்கு முன்பு இவர் இருந்த குக்கர் கட்சி பிரமுகர்கள், பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களையும், உறவினர்களையும் அழைத்து இவரது கிராமமே வியக்கும் வகையில் பிரமாண்ட விழா நடத்தி மொய் வசூல் நடத்தி இருக்கிறாரு.. மொய் விழாவில் வசூலான தொகை போல, ஏற்கனவே நடத்திய இல்ல விழாக்கள் மூலமே சொத்து சேர்த்ததாக அதிகாரிகளை மடைமாற்றம் செய்ய முயல்வதாக ஹனிபீ மாவட்ட மக்களிடையே ஒரே பேச்சாக இருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பாரபட்ச வேலையால, அந்த ஊருக்கு பணி மாறுதல் வேண்டாம்னு ஓட்டம் பிடிச்ச அதிகாரி பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிராம ஊராட்சிகளை கவனிக்குற துறையில, கடந்த சில நாட்களுக்கு முன்னாடி திட்ட இயக்குனர்கள் நிலையில் பணியிட மாறுதல் செஞ்சாங்க.. இதுல பெயரின் முடிவில் சாமியை கொண்டவருக்கு வெயிலூருக்கு மாறுதல் உத்தரவு வந்திருக்குது.. இவரு வெயிலூர்ல ஏற்கனவே இந்த பொறுப்புல பணிபுரிஞ்சு இருக்காரு.. இதனால வெயிலூருக்கு வந்த உத்தரவை பார்த்து அதிர்ச்சியாகிட்டாராம்..
நான் அங்க ேபாக மாட்டேன்னு, எப்படியோ ஒருவழியாக மாறுதல் உத்தரவை திரும்ப வாங்க வெச்சிட்டாராம்.. இதுக்கு காரணம், வெயிலூர்ல இருந்தப்ப, போன ஆட்சியில இவரு பாரபட்சத்தோட வேலை செஞ்சது தானாம்.. இலை வேட்டி கட்டாதது ஒண்ணுதான் குறையாம்.. மத்த எல்லா வேலைகளையும் செஞ்சிவிட்டாராம்.. அதனாலத்தான் வெயிலூர் மாறுதலை பார்த்து ஐயா அதிர்ச்சியாகிட்டாருன்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்லிக்குறாங்க.. இப்ப இருக்குற ஈரமான ரோட்டிலும் அவரை அங்கிருந்து அனுப்பி வைக்க வேலை செஞ்சிட்டு இருக்குறதாக சொல்றாங்க…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.