காசா: காசாவில் தினமும் 4மணி நேரத்திற்கு இஸ்ரேல் ராணுவம் ஈடுபடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் தினமும் 4 மணி நேரம் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி, ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்கத்திற்கு பின், இஸ்ரேல்-பாலஸ்தீனியம் இடையே போர் மூண்டது. ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 1,400 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 240க்கும் மேற்பட்டோர் பணைய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இஸ்ரேலின் பதில் தாக்குதலுக்கு தற்போது வரை 10,500 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 15 லட்சம் பாலஸ்தீன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறினர். இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 36 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், விமானப்படை மற்றும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக வடக்கு காசா, காசா நகர், கார்ல் நியுளிஸ் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலின் துருப்புகள் சுற்றி வளைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஹமாஸின் 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் கோட்டையாக கருதப்படும் ஜப்பாளியா பகுதி முழுவதுமாக கைப்பற்றிவிட முயற்சி செய்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் தினமும் 4 மணி நேரம் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என இஸ்ரேல் இணக்கம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. காசாவை கைப்பற்றவோ, ஆக்கிரமிக்கவோ, ஆட்சி செய்யவோ இஸ்ரேல் திட்டமிடவில்லை. எங்களுடைய இலக்கு ஹமாஸ் தான் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு மேலாக ஹமாஸ் இஸ்ரேல் போர் நீடித்து வரும் நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான போர் நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த நான்கு மணி நேர போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுமென கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் உதவி நாடவும் தற்காலிகச் சண்டைநிறுத்தம் துணைபுரியும் என்றார் அவர். போரில் அப்பாவி மக்கள் பாதிக்க கூடாது என இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.