இஸ்லாமிய வாழ்வியல்
“ஜனாதிபதி அவர்களே, நேற்று இரவு நன்றாகத் தூங்கினீர்களா?”- இது செய்தியாளர்களின் வினா.
“ஆமாம். எப்போதும்விட நான் நேற்று அமைதியாகத் தூங்கினேன். எங்கள் பரிசோதனை வெற்றி பெற்று விட்டது. இந்த உலகத்தில் நாங்கள் தான் இப்போது வலிமை வாய்ந்தவர்கள்”- இப்படிப் பதில் சொன்னவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரூமன்.
இதற்கு முதல்நாள்தான் ஜப்பான் நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு களை வீசியது. நாகசாகி, ஹிரோஷிமா எனும் இரண்டு நகரங்களும் வரைபடத்திலேயே இல்லாமல் ஆகிவிட்டன. எப்படிச் செத்தோம் என்று அறியாமலேயே லட்சக் கணக்கான அப்பாவி மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார்கள்.
எல்லா வகையான போர் தர்மங்களையும் சர்வதேச சட்டங்களையும் மனித நாகரிகங்களையும் மீறி, உலகிற்குத் தன் வல்லமையை நிரூபிக்க வேண்டும் எனும் ஒரே காரணத்திற்காக நடத்தப்பட்ட கொடூரம் அது.
லட்சக் கணக்கான மக்களைக் கொன்றொழித்த பிறகுதான் ஜனாதிபதி டிரூமன் நிம்மதியாக உறங்கினாராம்.
அது ஒரு போர்க்களம். அந்தக் களத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாகச் செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) துடித்துப்போய்விட்டார்.
அந்த இடத்திற்கு விரைந்தார். அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தார். பிறகு முகம் சிவக்க, தம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் கேட்கிறார்- “இவள் போர் செய்யவில்லையே? பிறகு ஏன் கொலைக்கு ஆளானாள்?”
இவ்வாறு கேட்டு, போர் சமயத்திலும்கூட அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கடுமையாகக் கண்டித்தார். மனிதத் தன்மைகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிவிடும் போர்க் களத்திலும் இஸ்லாம் மானுட நாகரிகத்தைக் கடைப்பிடித்தது. 1400 ஆண்டுகளுக்கு முன்பே அது மிக உயர்வான போர் ஒழுங்குமுறைகளை வகுத்துத் தந்துவிட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்: “போரில் பங்குகொள்ளாத வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள்,பெண்கள் ஆகியோரைக் கொல்லாதீர்கள்.”
“மடங்களில் உள்ள துறவிகளையும் வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் மக்களையும் கொல்லாதீர்கள்.”
“நெருப்பால் தண்டனை வழங்குவதற்கு நெருப்பின் அதிபதியைத் தவிர (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் உரிமை கிடையாது.”
“விளைநிலங்களையும் மக்கள் வாழும் பகுதிகளையும் அழிக்காதீர்கள்.”
இப்படிப் பல கட்டளைகள், நெறிமுறைகள். இவை எல்லாவற்றையும்விட திருக்குர்ஆனில் ஓர் அருமையான வசனம் உள்ளது. மனித உயிர்களை இஸ்லாம் எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை அதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
“நியாயமின்றி ஒருவன் மற்றவனைக் கொலை செய்துவிட்டால் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போல் ஆவான். எவன் ஒருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கிறானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” (குர்ஆன் 5:32)
அநியாயமாக மனித இரத்தம் சிந்தப் படுவதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால் தவிர்க்கமுடியாத நிலையில் போர் மேகங்கள் சூழுமேயானால் அப்போதும்கூட அப்பாவி மக்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக உள்ளது. இஸ்லாம் கூறும் இந்த மானுட தர்மத்தைப் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
– சிராஜுல்ஹஸன்
இந்த வாரச் சிந்தனை
“இறைவன் தடுத்துள்ள எந்த ஓர் உயிரையும் அநியாயமாகக் கொலை செய்யாதீர்கள்.” (குர்ஆன்17:33)