Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனித உடலின் தசைக்குள் ஊடுருவி கொல்லக்கூடியது; லெபனான் மீது ‘பாஸ்பரஸ்’ குண்டு வீச்சு: இஸ்ரேலுக்கு மனித உரிமை அமைப்பு கண்டனம்

பெய்ரூட்: லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசா போர் தொடங்கிய பிறகு, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள யோமோர் நகரில் கடந்த 3ம் தேதி இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களாக 7 புகைப்படங்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த தாக்குதலால் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு கார் தீப்பிடித்து எரிந்துள்ளன. இந்த கொடிய குண்டுகள் வெடிக்கும் போது 125 முதல் 250 மீட்டர் சுற்றளவுக்கு தீப்பிழம்புகளை சிதறடிக்கும் தன்மை கொண்டவை. இது மனித உடலின் தசை மற்றும் எலும்புகளை ஊடுருவி எரிக்கக்கூடியது. இஸ்ரேல் ராணுவம் மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த கொடிய ரசாயன குண்டுகளை வீசியுள்ளது. இது சர்வதேச மனிதநேய சட்டங்களை மீறும் செயலாகும்’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் தரப்பில் கூறுகையில், ‘லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் பயன்படுத்தவில்லை. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே ஆயுதங்களை பயன்படுத்துகிறோம்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தாக்குதல் சம்பவத்தால் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.