நன்றி குங்குமம் டாக்டர்
பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் 2000 ஆம் ஆண்டு கஹோ நா… பியார் ஹை என்ற ஹிந்தி படத்தில் நாயகனாக களம் இறங்கியது முதல் தற்போது வரை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஹிருத்திக் ரோஷன். இந்தியாவின் பிட்டஸ்ட் நடிகர்களை வரிசைப்படுத்தினால் அதில் ஹிருத்திக்கு தனி இடம் உண்டு. இவரது ஃபிட்டான உடலமைப்பு மற்றும் தோற்றத்திற்காக இவர் “கிரேக்க கடவுள்” என்ற பட்டப் பெயரும் பெற்றுள்ளார்.
தற்போது ஹிருத்திக் ரோஷன் அயன் முகர்ஜியுடன் வரவிருக்கும் ஆக்ஷன் படமான வார் 2 க்கு தயாராகிவருகிறார். இதில் ஜூனியர் என்.டி.ராமராவ் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஃபைட்டர் படத்தில் தனது அசத்தலான உடலமைப்பால் ரசிகர்களை கவர்ந்த ஹிருத்திக் தனது ஃபிட்னெஸூக்காக கடைபிடிக்கும் பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாடு குறித்து பகிர்ந்துகொண்டவை:
ஒர்க்கவுட்ஸ்:
நான் தினசரி விடியற்காலையே எழுந்துவிடுவேன். காலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் எனது ஓர்க்கவுட் பயிற்சிகளுக்காக நேரத்தை செலவிடுகிறேன். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே உடற்பயிற்சிகள் செய்கிறேன். மீதம் இரண்டு நாட்கள் கடுமையான உடற்பயிற்சிகளுக்கு விடுமுறை அளித்துவிடுவேன். எனது உடற்பயிற்சிகளில் கார்டியோவுக்கு முக்கிய இடம் உண்டு. இதில், தினமும் குறைந்தது 10,000 படிகளை ஏறி இறங்குவேன் அல்லது கடற்கரையில் ஜாகிங் செல்லது அல்லது குறைந்தது 40 நிமிட நீச்சல் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கிறேன். இதைத் தொடர்ந்து வழக்கமான சில பயிற்சிகளையும் மேற்கொள்ளுகிறேன். உதாரணாக எடை பயிற்சி, சைக்கிளிங் போன்றவையும் இருக்கும்.
உணவு கட்டுப்பாடு:
நான் ஒரு குறிப்பிட்ட வகையான உணவைப் பின்பற்றுகிறேன். இது எனது ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரத்துக்கு தகுந்தவாறு அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். மேலும் எனது எடை அளவைப் பொறுத்தும் அவ்வப்போது மாற்றியமைத்து வருகிறேன். அதுபோன்று உணவு வேளைகளில் ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், ஒவ்வொரு நாளும் ஆறு முதல் ஏழு வேளைகள் வரை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உணவை உட்கொள்கிறேன்.
அந்த வகையில், காலையில் ஓர்க்கவுட்களை முடித்தவுடன் ஒரு கப் அவகேடோ பழச்சாறு அருந்துவேன். பின்னர், சிறிது நேரம் கழித்து காலை உணவாக 6 முட்டையின் வெள்ளைக்கருவும் அதனுடன் 70 கிராம் புரதம் அடங்கிய ஏதாவது ஒரு உணவு மற்றும் ஏதாவது ஒரு சாலடுகள் மற்றும் காய்கறிகள் அடங்கிய ஒரு செட் உணவை உட்கொள்கிறேன். அதுபோன்று மதிய உணவிலும், புரதம் நிறைந்த உணவுகள், மீன், முட்டையின் வெள்ளைக்கரு, சிக்கன் கறி, ஓட்ஸ், குயினோவா, ஸ்வீட் போட்டேடோ மற்றும் அரிசி சாதம், பயறு வகைகள் போன்றவற்றை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்கிறேன். மேலும் எனது பயிற்சியாளர் கிரிஸ் கெத்தின் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகள் மற்றும் உணவு முறைகளையும் பின்பற்றிவருகிறேன்.
அதுபோன்று ஃபிட்னெஸ் என்று எடுத்துக்கொண்டால் தூக்கம் மிக முக்கியமானது. ஒருவருக்கு சரியான தூக்க நேரம் அமைந்தாலே அவர் பெரும்பாலும் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார். எனவே, தூக்கத்திற்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். எவ்வளவு முக்கியமான வேலைகள் இருந்தாலும் இரவு உணவை 7 மணியிலிருந்து 7.30க்குள் முடித்துவிட்டு சிறிதுநேர ஓய்வுக்கு பின் ஒன்பது மணிக்கு தூங்கச் சென்றுவிடுவேன்.
அதுபோன்று, உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதிலும் கவனமாக இருப்பேன். அதற்காக ஒவ்வொரு நாளும் சுமார் 4-5 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்வேன். இவை அனைத்தும்தான் எனது ஃபிட்னெஸுக்காக நான் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களாகும்.நமது நாட்டை பொருத்தவரை பெரும்பாலானவர்கள் ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உணவிலும் கட்டுப்பாடு கொள்வதில்லை. நாவைக் கட்டுப்படுத்த முடியாமல், பிடித்த எல்லாவற்றையும் உண்டுவிட்டு பின்னர், ஆரோக்கியம் கெட்டு பல நோய்களால் அவதிப்படுகிறார்கள். அப்படியில்லாமல், ஒவ்வொருவரும் ஃபிட்னெஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்