சென்னை: பெரியார் சிலை உடைப்பு, திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் உள்பட பா.ஜ. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்து விட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி பா.ஜ. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனராஜ் ஆஜரானார். அதற்கு அரசு தரப்பில் வழக்கறிஞர் பாபு முத்து மீரான் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அறநிலையத் துறை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக, சிவகாஞ்சி, கரூர், ஊட்டி, திருவாரூர் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முதல் தகவல் அறிக்கை கட்டத்திலேயே இருப்பதால் அந்த 4 வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், இதே விவகாரத்தில் விருதுநகர், இருக்கன்குடி, ஈரோடு ஆகிய காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிவிட்டது. எனவே,இந்த 3 வழக்குகளை ரத்து செய்ய முடியாது. ஈரோடு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது.
பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஈரோடு காவல் நிலையத்தில் பதிவாகி, அங்குள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அவை சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. கனிமொழியை விமர்சித்தது தொடர்பாக ஈரோட்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. அந்தந்த விசாரணை நீதிமன்றங்கள் 3 மாதத்தில் வழக்கைமுடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.