தமிழ்நாட்டில் கார்த்திகை மாதம்தான் தீபத் திருநாளாக கொண்டாடப்பட்டாலும் மற்ற மாநிலங்களில் தீபாவளியைத்தான் தீபத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். வட இந்தியா, தென் இந்தியா, கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா மாநிலங்களில் தீபாவளி கொண்டாடும் முறை பற்றி பார்க்கலாம்.
அயோத்தி திரும்பிய ஸ்ரீராமர்: தென்னிந்திய மாநிலங்களில் தீபாவளியை ஒரு மாதிரியாக கொண்டாடினாலும், வட இந்தியாவில் சில மாநிலங்களில், ஸ்ரீராமபிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து தன் குடும்பத்தோடு அயோத்தி நகரத்திற்கு திரும்பிய நன்னாளையே தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர்.
வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு: ஸ்ரீராமபிரான் வனவாசம் சென்றதால் ஒளியிழந்து களையிழந்த தங்கள் அயோத்தி மாநகரம், ஸ்ரீராமபிரான் திரும்பி வந்த உடன் ஒளிபெற்றதாக கருதி பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து கொண்டும் பட்டாசுகளை வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த கொண்டாட்டம் உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், பீஹார், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த பாராம்பரிய பழக்க வழக்கமானது இன்றும் தொடர்ந்து இருந்து வருகிறது.
தீபங்கள் ஏற்றும் சீக்கியர்கள்: பஞ்சாபில், 1577ம் ஆண்டில் இத்தினத்தில்தான் தங்கள் புனித திருத்தலமான பொற்கோவில் கட்டுமானப் பணியை துவங்கினர். அதைக் கொண்டாடவே தீபாவளித் திருநாளன்று இரவில் சீக்கியர்கள் தங்கள் வீடுகளிலும், குருத்வாராக்களிலும் தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்து தீபாவளித் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.
புத்தாண்டு கொண்டாடும்: குஜராத் மாநிலத்தை பொறுத்தவரையில், தீபாவளித் திருநாளை புத்தாண்டு தினமாக கொண்டாடி மகிழ்கின்றனர். அன்றைய தினத்தில் புதிய சொத்துக்கள் வாங்குவது, புதிய தொழில்கள் தொடங்குவது, அலுவலகங்கள் கடைகள் திறப்பது, திருமணம் செய்வது என நல்ல காரியங்களை செய்வதற்கு உகந்த நாளாக கருதுகின்றனர். தீபாவளி நாளன்று இரவில் மாநிலம் முழுவதும் தியா என்ற பெயரில் விளக்குகளை ஏற்றி வைத்து வணங்குகின்றனர். இதனால் அந்த ஆண்டு முழுவதும் மழை வளத்தையும் செல்வச் செழிப்பையும் கொண்டு வரும் என்பது நம்பிக்கையாகும்.
5 நாட்கள் பண்டிகை: மஹாராஷ்டிராவில் தீபாவளிப் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளன்று பசுவழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மூன்றாம் நாளான தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்து, பின்பு புத்தாடைகளை அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர். தம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர். நான்காவது நாளான லட்சுமி பூஜையன்று ஒவ்வொரு வீட்டிலும் பணம் மற்றும் நகைகளை லட்சுமி தேவியாக பாவித்து வணங்குகின்றனர்.
காளி பூஜை கொண்டாட்டம்: மேற்கு வங்கத்தில் தீபாவளித் திருநாள் காளி பூஜையாக வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் பல்வேறு பகுதிகளில் காளி தேவியின் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதோடு மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிலுள்ள சில கிராமங்களில் மக்கள் தீபாவளித் திருநாளன்று தங்கள் முன்னோர்களின் ஆன்மாவை சொர்க்கத்திற்கு வழியனுப்பும் நாளாக கருதி கொண்டாடுகின்றனர்.
கர்நாடகாவில் 3 நாட்கள்: கர்நாடகாவில், தீபாவளிப் பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளான அஸ்விஜா கிருஷ்ண சதுர்த்தசி அன்றே மக்கள் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து தீபாவளியை கொண்டாடுகின்றனர். தீபாவளி முடிந்த மறுநாள் அன்று பாலிபத்யாமி என்று கொண்டாடுகின்றனர்.
* சத்யபாமா
ஆந்திர மாநிலத்தில், பகவான் கிருஷ்ணரின் மனைவி சத்யபாமா நரகாசுரனை கொன்ற நாளாக கருதி தீபாவளித் திருநாளை கொண்டாடுகின்றனர். அன்றைய நாளில் சத்யபாமாவின் களிமண் சிலைகளுக்கு பூஜைகள், பிரார்த்தனைகள் செய்து வழிபட்டு தீபாவளியை கொண்டாடுகின்றனர்.