நன்றி குங்குமம் டாக்டர்
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை இந்த பூவுலகிற்கு வரவேற்பதில் இருக்கும் அளவற்ற மகிழ்ச்சியை சொல்லில் கொண்டு வர இயலாது. குழந்தை ஒரு வரம் என்றால் குழந்தை வளர்ப்பு ஒரு தவம்.
ஒவ்வொரு பெற்றோருமே தங்கள் குழந்தைக்குத் தேவையான பொருட்களைப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவர். அவற்றில் ஆடைகள், விளையாட்டு பொம்மைகள், தொட்டில், மெத்தை, இவற்றோடு அத்தியாவசிய தேவையான அணையாடை என்கிற டயப்பர் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. பிறந்த குழந்தையைப் பேணிக்காப்பதில் புதிய பெற்றோருக்கு நிறைய சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் வருவது இயல்பான ஒன்று. குழந்தையை வளர்ப்பது என்பது அவரவருக்கு தெரிந்ததை செய்வது என்பதை விட்டு சரியான வளர்ப்பு முறையை அறிந்து குழந்தையை பேணிக் காத்தல் மிகவும் இன்றியமையாததாகும்.
இவற்றுள் டயப்பர் பற்றி பெற்றோர் அறிந்துகொள்வதும் அவசியமாகும். அன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் பருத்தி வேட்டிகள், சேலைகளை குழந்தைகளுக்கு அணையாடையாக (Diaper) பயன்படுத்தினார்கள்.அதனால், குழந்தைகளுக்கு டயப்பர் (Diaper) பயன்படுத்துவதால் வரும் சிறு சிறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இன்றி இருந்தது. தற்போது, நமக்கு ஒரு முறை பயன்படுத்தி விட்டு அப்புறப்படுத்தக்கூடிய (Diaper) பயன்படுத்த எளிதாக உள்ளது.
இரவிலும், நீண்ட தூரப் பயணத்தின் போதும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய டயப்பர் சிறந்தது. இது தவிர, நமக்கு காட்டன் துணியாலான டயப்பர் கிடைக்கிறது. துணியாலான டயப்பர் குழந்தைகளுக்குச் சிறந்தது. ஆனால், இதில் பராமரிப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. காட்டன் டயப்பரை மிதமான சோப்பால் அலசி, உலரவைத்து பயன்படுத்த வேண்டும். பலர் டயப்பரைப் பயன்படுத்துவதில் பல தவறுகளைச் செய்கின்றனர். குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும்போது எக்காரணத்தை கொண்டும் குழந்தைகளின் காலைத் தூக்கி வயிறு பின்னோக்கி செல்வது போலச் செய்யக் கூடாது. மேலும் டயப்பர் பயன்படுத்துவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளது.
படி1: சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் உங்கள் கைகளைக் கழுவவும் வேண்டும்.
படி2: குழந்தையைச் சுத்தமான, உலர்ந்த மற்றும் பாதுகாப்பான இடத்தில் படுக்கவைக்கவும்.
படி3: அழுக்கு டயாப்பரை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
படி4: குழந்தையை சுத்தம் செய்ய சுத்தமான துணியாலான துடைபான்களைப் பயன்படுத்துங்கள். துடைக்கும்போது முன்னிருந்து பின்னாகச் செல்லுங்கள் (wipe front to back).
படி5: குழந்தையை நன்றாகக் காற்றில் உலர வைக்கவும். ஈரப்பதம் இருக்கும் போதே, புதிய டயப்பரை அணிந்தால் அலர்ஜி (rash) வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
படி6: டயப்பர் கிரீம் குழந்தைக்குப் பயன்படுத்துங்கள்.
படி7: இப்போது புதிய டயப்பரை அணியுங்கள். குழந்தையைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு, டயப்பரை மாற்றிய மேற்பரப்பை சுத்தம் செய்து மீண்டும் உங்கள் கைகளைக் கழுவ வேண்டும்.
படி 8: குழந்தையின் கைகளையும் கழுவ வேண்டும். இதனால் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.
ஒரே டயப்பரை பல மணி நேரம் பயன்படுத்த கூடாது. குழந்தையின் டயப்பரை எத்தனை முறை மாற்ற வேண்டும் என்பதும் முக்கியம். குழந்தையின் டயப்பர் ஈரமாகும்போது அதை மாற்ற வேண்டும். அவ்வாறு ஈரமாகவில்லை என்றாலும் 2-3 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
சரியான அளவு டயப்பரை தேர்ந்தெடுப்பது எப்படி?
1.குழந்தையின் எடைக்கு ஏற்றபடி டயப்பர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
2.டயப்பர் தொப்புளுக்கு கீழே நன்றாகப் பொருந்த வேண்டும்
3.குழந்தையின் பின்பகுதியை முழுவதுமாக மூட வேண்டும்.
4.குழந்தையின் தோலுக்கும் டயப்பருக்கும் இடையில் இரண்டு விரல் இடைவெளி இருக்க வேண்டும்.
5.டயப்பர் அணிவதால் தோலில் சிவப்பு புள்ளிகள் ஏற்படாதிருக்க வேண்டும்.
இவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தால் டயப்பரின் அளவை மாற்ற வேண்டும்.டயப்பர் அணியும்போது தோல் உலர்வாகவும், சுத்தமாகவும் இருந்தால் குழந்தைக்கு டயப்பரால் ஏற்படும் ஒவ்வாமை நோய்த் தொற்று ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.சரியான அளவு மற்றும் தரமான டயப்பரைத் தேர்ந்தெடுத்து சுகாதாரமான முறையில் டயப்பரை மாற்றி சிறிது நேரம் அதாவது டயப்பர் இல்லாமல் குறைந்தது 20 நிமிடம் காற்றில் தோல் உலரவிட்டு பின்பு டயப்பரைப் பயன் படுத்தினால் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் தன்னம்பிக்கையும் மேம்படும்.
குழந்தை ஒரு வயதாகும் போது நடக்க துவங்கும் சமயத்தில் பகலில் குழந்தை விழித்திருக்கும் நேரத்தில் டயப்பர் அணிவதைத் தவிர்க்கவும். இதனால் குழந்தைக்கு இயல்பான நடை அமையும். இரண்டு வயதிலிருந்து குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதைப் பெற்றோரிடம் சொல்லத் தொடங்கும். அதனால் டயாபர் அணிவதைத் தவிர்த்து கழிவறையை பயன்படுத்த பெற்றோர்கள் குழந்தைக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
தொகுப்பு: குணா