*கலெக்டர் தகவல்
பவானி : தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களின் நோக்கத்தை அறிந்து தகுதியுடையோர் விண்ணப்பித்து, வாழ்வில் உயர வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கேட்டுக் கொண்டார்.பவானி தாலுகா, குறிச்சி ஊராட்சி, கல்பாவி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நேற்று நடைபெற்றது.
முகாமில், அவர் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெற பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கிராம மக்களும் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது.
பொதுமக்களிடம் அளிக்கும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பதே இம்முகாமின் நோக்கம்.இக்கிராமத்தில் நடைபெறும் முகாமில் வேளாண்மை-உழவர் நலம், வேளாண்-பொறியியல், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள், கால்நடை பராமரிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் கருத்து காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்கள் மற்றும் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து துறைசார் அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து, தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து பயனடைய வேண்டும்.வீட்டுமனை பட்டா கோரி அதிகளவில் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும். எனவே, ஆவணங்களின் அடிப்படையில் தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்.
பெண் குழந்தைகள் உயர்கல்வி பயில பெற்றோர் துணையாக இருக்க வேண்டும். குழந்தை திருமணம், இளவயது கர்ப்பம் ஆகியவற்றிலிருந்து பெண் குழந்தைகளை காக்கவும், உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் வழங்க கல்லூரி கனவு எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அரசு துறைகளில் அதிகமான பெண்கள் உள்ளனர். எனவே, அனைவருக்கும் அரசு வேலைக்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டும் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.11,51,820 மதிப்பில் வீட்டுமனைப்பட்டா, 2 பேருக்கு ரூ.2,10,046 மதிப்பில் இ-பட்டாக்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டம் கல்வி உதவித் தொகை, உணவு மற்றும் வழங்கல் துறையின் சார்பில் 13 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், தொழிலாளர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை, வேளாண்மைத் துறையின் சார்பில் வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டத்தின் கீழ் ஒருவருக்கு சுழற் கலப்பை மற்றும் விதை பெட்டகம் என 40 பேருக்கு ரூ.14.48 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, துறைசார் அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, வேளாண்மைத்துறை சார்பில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டத்தின் கீழ் பட்லூர் கிராமத்தை சேர்ந்த ஜான்சன், ரூ.1 லட்சம் உதவித்தொகை பெற்று ஊறுகாய் புல் தயாரிக்கும் தொழில் தொடங்கி செயல்படுத்தி வருவதை நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
முகாமில், வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் குரு சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முருகேசன், வேளாண் விற்பனை குழு செயலாளர் சாவித்திரி, குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மரு.கவிதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜ கோபால், பவானி தாசில்தார் சித்ரா, மண்டல துணை தாசில்தார் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.