Friday, December 8, 2023
Home » இல்லறத்தை விரும்பாத தாயுமானவர்…

இல்லறத்தை விரும்பாத தாயுமானவர்…

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

18-ஆம் நூற்றாண்டு! அயல்நாட்டுக்காரர்களின் பல்வேறு விதமான படையெடுப்புகளாலும், உள்ளூரில் இருந்த பலவிதமான ஆட்சியாளர்களின் குழப்பங்களாலும், எப்படியாவது நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற பெரும்பாலானவர்களின் பேராசையாலும், ஒரு பெருங்குழப்பம் நிலவிவந்தது. அந்த நேரத்தில், அவதரித்தவர்தான் ‘தாயுமானவ சுவாமிகள்’. கடும் வெயில் காலத்தில் கூடிவந்த மேகங்கள் மழை பொழிந்ததைப் போல, அவதரித்த தாயுமானவ சுவாமிகள், அற்புதமான பாடல்களை அப்படியே பொழிந்தார்.

அப்பாடல்கள் அனைத்தும் அவருடைய சொந்த அனுபவத்தில் விளைந்தவை; மக்களின் தவறான நடவடிக்கைகளை, குழப்பங்களை, எளிமையான சொற்களால் வெளிப்படுத்தும் பாடல்கள் அவை. ஆண்டவனிடம் முறையிட்டு, அருள் பெற்று, தான் அடைந்த அனுபவங்களையே, தாயுமானவ சுவாமிகள் பாடல்களாக வெளிப்படுத்தினார்.

இன்றைய நிலையை, நேருக்குநேராகக் கண்களின் முன்னால் நிறுத்துவதைப்போன்ற பாடல்களைத்தந்த தாயுமானவ சுவாமிகள், ஞானத்தின் உச்ச நிலையில் இருந்தவர். எதிர்பாராத விதமாக ஏராளமான நிகழ்வு களைச் சந்தித்து, இறையருளால் வெளிப்பட்டவர்.திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில், சிவாலயத்தர்ம கர்த்தாவாக இருந்தவர் கேடிலியப்ப பிள்ளை. அவர் மனைவி கஜவல்லி அம்மையார் ஆவார். அந்த தம்பதிகளுக்கு, சிவசிதம்பரம் எனும் குழந்தை ஒன்று இருந்தது.

பிள்ளைப்பேறில்லாத தன் அண்ணனுக்கு, தன் பிள்ளையான சிவசிதம்பரத்தை சுவீகாரமாகக் கொடுத்துவிட்டார் கேடிலியப்பர். தெய்வ பக்தி, கல்வி – கேள்வி, நிர்வாகத் திறமை என அனைத்திலும் சிறந்து விளங்கிய கேடிலியப்பர், ஒழுக்கத்திலும் தலை சிறந்து விளங்கினார். கேடிலியப்பரைப் பற்றிய தகவல்களை அறிந்த அப்போதைய திருச்சி அரசரான விஜய ரகுநாத சொக்கநாத நாயகர் என்பவர், கேடிலியப்பரைத் தன் அரண்மனைப் பெருங்கணக்கராக நியமித்தார்.

அதன் காரணமாக, வேதாரண்யத்தை விட்டுத் திருச்சிக்குக் குடிபெயர்ந்தார் கேடிலியப்பர். திருச்சியில், அரண்மனை வேலையை அக்கறையோடு கவனித்து வந்த கேடிலியப்பர், தான் செய்துவந்த சிவத்தொண்டுகளையும் நிறுத்தவில்லை. அடியார்களுக்கு அன்னமிடுவது, நலிந்தவர்க்கு வலிந்துபோய் உதவுவது என்பவைகளையும், தவறாமல் செய்து வந்தார் கேடிலியப்பர்.

அத்துடன் தன் மனைவி கஜவல்லியுடன், நாள்தோறும் திருச்சி மலைக்கோட்டை மலையிலேறி, மாத்ருபூதேசுவரர் எனும் தாயுமான சுவாமி உடனுறை சுகந்த குந்தளாம்பிகை எனும் மட்டுவார் குழலம்மையைத் தரிசித்து வந்தார் கேடிலியப்பர். நாளாக நாளாகக் கேடிலியப்பருக்கு மனதில் ஒரு வருத்தம் தோன்றி, மெள்ளமெள்ள அது கவலையாகவே மாறியது. வேறென்ன? பிள்ளைச் செல்வம் இல்லாத குறைதான், கேடிலியப்பரைப் பெருங்கவலையாக வாட்டியது. ஏற்கனவே பிறந்த முதல் குழந்தையை, தன் மூத்த சகோதரருக்கு சுவீகாரமாகக் கொடுத்துவிட்டாரல்லவா? அதனால் அந்தக் குறைதீர, இப்போது நாள்தோறும் மலை ஏறி, அங்கு எழுந்தருளி யிருக்கும் தெய்வங்களிடம் முறையிட்டார் கேடிலியப்பர். கூடவே, கணவரும் மனைவியுமாக விரதங்களைக் கடைப்பிடித்தார்கள்.

‘வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுதும் தருவோய் நீ!’ எனத் திருமுறைகள் சொன்னது பலித்தது. கேடிலியப்பரின் மனைவி கருவுற்றார். காலக்கிரமத்தில், ஓர் ஆண்குழந்தை பிறந்தது. திருச்சி தாயுமானவ சுவாமியை வேண்டிப்பிறந்த குழந்தை என்பதால், குழந்தைக்குத் ‘தாயுமானவன்’ எனப்பெயரிட்டார்கள். சிறுவயது முதலே, பெற்றோர்களின் நல்ல பழக்க – வழக்கங்கள்; எந்த நேரமும் வீட்டில் ஒலிக்கும் மங்கல நல்வார்த்தைகள் என அனைத்தும், அவரை அறியாமலே தாயுமானவரிடம் பதிந்தன.

நல்லதொரு நாளில், ‘அட்சராப்பியாசம்’ என்ற பெயரில், தாயுமானவருக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கினார்கள். தாயுமானவர், சம்ஸ்க்ருதம் எனும் வடமொழி, தமிழ்மொழி – இரண்டிலும், பெரும் திறமை பெற்றவராக ஆனார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அந்தக் காலத்தில் தாயுமானவர் கைப்படாத ஏட்டுச்சுவடி நூல்களே கிடையாது எனும் அளவிற்கு, தாயுமானவரின் கல்வியறிவு சிறந்து விளங்கியது. ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை, அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்வது; அதை நன்கு சிந்திப்பது என இருந்த தாயுமானவர், கல்வியில் கரைகண்டவராக இருந்ததில் வியப்பு இல்லை.

அதே சமயம், அப்போது நாட்டில் இருந்த அரசாங்கக் குழப்பங்கள், அயல்நாட்டுப் படையெடுப்புகளால் விளைந்த போர்கள், அதனால் உண்டான மதக்கலவரங்கள், படித்தவர்களிடையே இருந்த பிடிவாத மன வேறுபாடுகளால் எழுந்த, எதற்கும், யாருக்கும் உதவாத வாதப்பிரதி வாதங்கள் என அனைத்தும் தாயுமான வரைக் கவலை கொள்ளச்செய்தன.பெற்றோர்களைப் போலவே, நாள்தோறும் மலைஏறி தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலியம்மையைத் தரிசித்து, தன் மனக்குறையைச் சொல்லி, ‘‘நாட்டில் ஒற்றுமையும் அமைதியும் தவழ வேண்டும்!’’ என வேண்டித் திரும்புவதை, வழக்கமாகக் கொண்டார் தாயுமானவர். இவ்வாறு மிகவும் இளவயதில், தெய்விக நிலையில் தாயு மானவர் அனுபவப்பட்டிருந்த அந்த நேரத்தில், எதிர்பாராத விதமாகக் கேடிலியப்பர் இறைவன் திருவடிகளை அடைந்தார்.

தன்னை இந்த உலகிற்குத் தந்து, நல்லவை எல்லாம் சொல்லிக்கொடுத்து வளர்த்த தந்தையை இழந்த தாயுமானவர் வருந்தினார். ஆனால், தாயுமானவரைவிட அதிகம் வருந்தியது அரசர்தான். ‘‘உத்தமமான ஒழுக்க சீலர்! அரண்மனைப் பெருங்கணக்கர் பதவியை, நல்லமுறையில் நிர்வாகம் செய்தவர் இல்லை என்றால்… அந்தக் கேடிலியப்பர் வகித்து வந்த பதவிக்கு யாரை நியமிப்பது?’’ என்பதே மன்னரின் பெருங்கவலையாக இருந்தது.

மன்னரின் மனக்கவலை அறிந்த மந்திரி, ‘‘ஏன் கவலைப்படுகிறீர்கள்? கேடிலியப்பரின் மகன் தாயுமானவர் இருக்கிறார்; வயதில் சிறியவராக இருந்தாலும், தந்தையிடம் இருந்த அருங்குணங்களும் திறமையும், அப்படியே வாய்த்திருக்கிறது, தாயு மானவருக்கு. அவரையே இந்தப் பெருங் கணக்கர் பதவியில் அமர்த்தலாம்; தகுதியும் திறமையும் வாய்ந்தவர்’’ என்று அழுத்தமாகச் சொன்னார் அமைச்சர்.

அமைச்சரின் வாக்கை அப்படியே ஏற்றார் அரசர். பதினான்கே வயதான தாயுமானவர், அரசரின் வேண்டு கோளுக்கிணங்கி, அரண்மனைப் பெருங்கணக்கராகப் பதவி ஏற்றார். நாளாகநாளாக அரசர், தாயுமானவரிடம் முழுமையாகத் தன்னை இழந்தார். தாயுமானவரின் நடவடிக்கைகள், அடக்கம், இரக்கம், பொறுமை என அனைத்திலும் மன்னர் தன்னை இழந்தார். அரண்மனை வேலை; அதுவும் பெருங்கணக்கர் பதவி! இருந்தும், தாயுமானவர் கொஞ்சம்கூட மனதில் ஆணவப்படவில்லை.

அதே சமயம், தாயுமானவரின் மனம், தண்ணீர் தாகம் கொண்டவன் வேறு ஒன்றையும் நாடாமல் தண்ணீரையே தேடி ஓடுவதைப்போல, ‘‘என் மனதில் எழுந்த சந்தேகங்களைப்போக்க வல்ல, ஞானாசிரியர் எங்கு கிடைப்பார்? எப்போது பார்ப்போம்?’’ என்று ஏங்கியது.இந்த ஏக்கத்தைத் தீர்க்கத் தெய்வமே வழி வகுத்தது. `வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுதும் தருவோய் நீ!’ எனத் திருமுறைகள் சொன்னதற்கேற்ப, தாயுமானவரின் வேண்டுதலை நிறைவேற்றினார் சுவாமி.

திருமூலர் மரபில் வந்த மௌன தேசிகர் எனும், ‘மௌன குரு’ தாயுமானவருக்கு மந்திரோபதேசம் செய்து, அவரைத் தம் சீடராக ஏற்றார். அதன் பின், ‘‘தாயுமானவ! இன்னும் சிறிது காலம் இங்கேயே, அரண்மனையில் இரு! நீ மணம்செய்துகொண்டு, ஒரு பிள்ளையைப் பெற்ற பின், மீண்டும் வருவேன் நான்’’ என்றார் குருநாதர். தாயுமானவர் வருந்தினார்; ‘‘குருநாதா! என் மனம் இல்லறத்தை விரும்பவில்லை. தயவு செய்து, அடியேனுக்கு முக்தி மார்கத்தை அருளுங்கள்!’’ என வேண்டினார்.

அதை மறுத்தார் குருநாதர்; ‘‘தாயுமானவ! சொன்ன பேச்சைக் கேட்டு நட! நீ மணம் செய்துகொண்டு, பிள்ளைக்குத் தகப்பனான பிறகு, நான் மறுபடியும் வருவேன். அப்போது உனக்கு முக்தி வழியை உபதேசிக்கிறேன்’’ என்ற குருநாதர், தாயுமானவருக்கு ஆசி கூறி அகன்றார்.

அந்த நேரத்தில் அரசர் காலமானார். அருள் தேடலிலே இருந்த தாயுமானவர், தம் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். விலகியவர், ராமேஸ்வரம் சென்று, அங்கேயே இருக்கத் தொடங்கினார். அப்போது, உறவினர் வற்புறுத்தலாலும் குருநாதர் உத்தர வின்படியும் தாயுமானவர், மட்டுவார் குழலம்மை எனும் உத்தமியைத் திருமணம் செய்து கொண்டார். ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கனகசபாபதி எனப்பெயர் இட்டார்கள். வந்த வேலை முடிந்துவிட்டது என்பதைப்போல, தாயுமானவரின் மனைவி காலம் ஆனார்.

பிள்ளையை உறவினரிடம் ஒப்படைத்து விட்டுத் துறவு பூண்டார் தாயுமானவர். ஏற்கனவே வாக்களித்ததைப் போல, மௌன குரு திரும்பி வந்தார்; தாயுமானவருக்கு முக்தி உபதேசம் செய்து அருள்புரிந்தார். தாயுமானவருக்கு நிஷ்டை கூடியது; ஞான அனுபவங்கள் எல்லாம் அருந்தமிழ்ப் பாடல்களாக வெளிப்பட்டன. அனுபவங்களை எல்லாம் அற்புதமான பாடல்களாக வெளியிட்டு வழிகாட்டிய தாயுமானவர், ராமநாதபுரத்தில் லட்சுமி நகர் எனும் இடத்தில், இறைவனுடன் இரண்டறக் கலந்தார். தாயுமானவரின் பாடல்கள் அனைத்தும், எளிமையான சொற்களால் உருவானவை; ஆழமான வாழ்க்கைத்தத்துவங்கள் நிறைந்தவை. ஒரு சில…

அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே! இறையே! பராபரமே!
அப்பா! என் எய்ப்பினில் வைப்பே!
ஆற்றுகிலேன் போற்றி என்று செப்புவது

அல்லால் வேறு
என் செய்வேன் பராபரமே!
பாராயோ! என்னை முகம் பார்த்து ஒருகால்
என் கவலை
தீராயோ! வாய் திறந்து செப்பாய் பராபரமே!
ஓயாதோ என் கவலை? உள்ளே ஆனந்த
வெள்ளம்
பாயாதோ ஐயா! பகராய் பராபரமே!

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
ஏழை நெஞ்சம்
புண்ணாகச் செய்தது இனிப் போதும்
பராபரமே!
துன்பக் கண்ணீரில் துளைந்தேற்கு உன்
ஆனந்த
இன்பக் கண்ணீர் வருவது எந்நாள் பராபரமே!

கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை
பராபரமே!
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி

இரங்கவும்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!
நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம்
அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே!

எளிமையான சொற்கள்! நம் உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அப்படியே பாடல் களாகத் தாயுமானவரால் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. உணர்வோம்! உயர்வோம்!

– பி.என்.பரசுராமன்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?