சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயர்நீத்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அப்போது மதிமுக உறுப்பினர் சுப்பிரமணி எழுந்து, மதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தி தங்களது மாத அமர்வு படி தொகையை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ஆணையர் மூலம் வழங்குவதாக தெரிவித்தார். கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் பேசுகையில், எனது மண்டலத்தில் 15 வார்டுகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்குவதால், பருவ மழைக்கு முன்பு இதை சரி செய்ய வேண்டும். பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க வேண்டும், என்றார்.
மேயர் பிரியா: தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தூர்வாரப்படும். திமுக உறுப்பினர் ராஜகோபால் பேசுகையில், எனது வார்டில் கட்டப்பட்ட நகர் நல மையம், இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை, என்றார். 7வது வார்டு அதிமுக கவுன்சிலர் கே.கார்த்திக் பேசுகையில், எனது வார்டில் பக்கிங்காம் கால்வாய் அருகில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
மேயர் பிரியா: குறிப்பிட்ட அந்த இடத்தை ஆக்கிரமிப்பு வராமல் மாநகராட்சி பாதுகாத்து வருகிறது. மண்டல குழு தலைவர் வி.வி.ராஜன் பேசுகையில், கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, தேம்ஸ் நதி போன்று மாற்றினால் தங்களது பெயர் வரலாற்றில் இடம் பெறும், என்றார்.
மேயர் பிரியா: கூவம் ஆற்றை நீர்வள ஆதாரத்துறை பராமரிக்கிறது. இதை சுத்தப்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் ஆலோசனைகள் வழங்கி உள்ளன. விரைவில் சீரமைக்கப்படும்.
நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன் பேசுகையில், சென்னை மாநகரில் பத்திரப்பதிவு செய்யப்படாத வீடுகளுக்கு வரி வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்நிலை அல்லாத பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு இந்த நிலை இருப்பதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார்.
நிலை குழு தலைவர் தனசேகரன் பேசுகையில், தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ள திட்டப்படி ஆன்லைன் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களுக்கு கூட வரி வசூல் செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த காலங்களில் ரெட் பார்ம் வழங்கப்பட்டது. நீர் நிலைகள் அல்லாத பகுதிகளில் வரி வசூல் செய்யலாம் என்ற நிலை இருந்தது. எனது பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 10 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களுக்கு தற்போது வீட்டு வரி வசூல் செய்யப்படுவதில்லை, என்றார்.
துணை மேயர் மகேஷ் குமார் பேசுகையில், நீர்நிலை ஆக்கிரமிப்பு தவிர்த்து, எப்போது வேண்டுமானாலும் அரசுக்கு தேவைப்படும் போது அந்த நிலத்தை எடுத்து கொள்ளலாம் என்ற அபிடவிட்டுடன் எடுத்து கொடுப்பவர்களுக்கு வரி வசூல் செய்வது குறித்து முடிவெடுக்கலாம், என்றார். ஆணையர் குமரகுருபரன் பேசுகையில், ‘‘ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் தற்போது வரி வசூல் செய்ய முடியாது. அதே நேரம் மாநகராட்சி நிலமாக இருந்தால் நாம் அரசின் அனுமதியை கேட்க வேண்டியதில்லை. எனவே அரசின் அனுமதி கிடைத்ததும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன்லைன் பட்டா வாங்கியவர்களுக்கும் வரி வசூல் செய்யவில்லை என்றார்கள். இதற்கான பட்டியலை மாவட்ட நிர்வாகம் தான் சேகரித்து வருகிறது. அதை கேட்டுள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும். அதற்கான பட்டியல் வந்தவுடன் பணி நடைபெறும்,’’ என்றார்.
மேயர் பிரியா: இதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தால் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசுகையில், ‘‘சாத்தியக் கூறுகள் இல்லாமல் நாங்கள் கேட்க மாட்டோம். குறிப்பிட்ட இடத்தை மீண்டும் ஆய்வு செய்து விதிகளின்படி அனுமதி கொடுக்க வேண்டும்,’’ என்றார். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.