திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டரிடம் விசிக மாநில அரசியல் குழுச்செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமையில் ஒதிக்காடு, ரெட்டில்ஸ்புரம் பகுதியில் வசித்து வரும் 48 குடும்பத்தினர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருந்ததாவது: திருவள்ளூர் ஒன்றியம், ஒத்திக்காடு கிராமம், ரெட்ஹில்ஸ்புரம் பகுதியில் 90 வருடங்களுக்கு மேலாக 48 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
இந்நிலையில் நாங்கள் வசிக்கும் இடம் நீர்நிலை பகுதி என்றும், வீடுகளை அகற்ற வேண்டும் என்றும் வருவாய்துறையினர் அறிவித்துள்ளனர். நாங்கள் அனைவரும் இந்து ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். விவசாயக் கூலி தொழிலாளர்கள். எங்களுடைய முன்னோர்கள் 90 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வந்தனர்.
இந்நிலையில் நாங்கள் வசிக்கக்கூடிய இடம் சமமான இடம். இங்கு தண்ணீர் எதுவும் தேங்கி நிற்பது கிடையாது. இங்கு பள்ளம் எதுவும் ஏற்பட்டதில்லை. நாங்கள் காலம்காலமாக வசித்து வரக்கூடிய இடத்தை அகற்றிட வருவாய் துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே நாங்கள் வசிக்கக் கூடிய இடத்தை எங்களுக்கே தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர். இந்தநிகழ்வின் போது விசிக மாவட்டச் செயலாளர் அருண் கௌதம், முகாம் செயலாளர் மோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.