செய்யூர்: பவுஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த கடுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தசராதன் (40). இவர் நேற்று முன்தினம் இரவு அக்கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி நடந்த கழைகூத்தாடி கூத்து நிகழ்ச்சியை காண தனது குடும்பத்தினருடன் சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்த தசராதன் வீட்டின் நுழைவாயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தசராதன் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.