சென்னை: அனுமதி பெறாமல் வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்த உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அத்திக்கடையில் கிறிஸ்தவ மத போதகராக இருக்கிறார் ஜோசப் வில்சன். இவர் கடந்த 2023ம் ஆண்டு, அத்திக்கடையில் ஒரு வீட்டை வாங்கி, அதில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தத் தொடங்கினார். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், குடவாசல் காவல் ஆய்வாளர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, அந்த கட்டிடத்திற்கு கட்டிட அனுமதி மற்றும் தேவாலயம் கட்டுவதற்கான திட்ட அனுமதி கோரி ஜோசப் வில்சன் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தார். ஆனால், மாவட்ட ஆட்சியர் இந்த விண்ணப்பங்களை நிராகரித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அந்த பிரார்த்தனைக் கூடத்திற்கு சீல் வைத்தார்.
வட்டாட்சியரின் நடவடிக்கையை எதிர்த்து ஜோசப் வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குடியிருக்கும் வீட்டைப் பிரார்த்தனை மண்டபமாக மாற்றக் கூடாது என்றும், இதற்கு அனுமதியில்லை எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வீட்டில் நடத்தப்படும் பிராத்தனைகாக ஒலிபெருக்கி எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, அரசு அதிகாரிகளின் அனுமதியின்றி ஒரு வீட்டைப் பிரார்த்தனைக் கூடமாக மாற்ற முடியாது என்றும் வீட்டில் பிரார்த்தனை செய்ய மாட்டேன் என்று மனுதாரர் உத்தரவாதம் அளித்தால், மாவட்ட ஆட்சியர், தாசில்தார் ஆகியோர் சீலை அகற்றலாம் என உத்தரவிட்டார். மேலும், உத்தரவை மீறி பிரார்த்தனை செய்தால் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி ஆணையிட்டார். மேலும், பிரார்த்தனைக் கூடம் அல்லது மண்டபம் கட்ட வேண்டுமானால், உரிய அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறுவது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் 2021ம் ஆண்டில் பிறப்பித்த தீர்ப்பு குறிப்பிடத்தக்கது.