ஓசூர்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இரானி கொள்ளையன் ஷேக்நாம்தார் உசேன் (34). இவன் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் நாடு முழுவதும் உள்ளது. மும்பையை தலைமை இடமாக வைத்து செயல்படும் இந்த கும்பலை சேர்ந்த ஷேக்நாம்தார் உசேன் மீது, பல்ேவறு திருட்டு வழக்குகள் ஓசூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது. ஓசூர் பகுதிகளிலும் வழிப்பறி செய்ததாக, டவுன் போலீஸ் ஸ்டேஷன், 3ம் அட்கோ போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கும் இருப்பதால், ஓசூர் அட்கோ போலீசார், கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலத்திற்கு சென்று, நீண்ட தேடுதலுக்கு பின்னர், ஷேக்நாம்தார் உசேனை கைது செய்து, ஓசூருக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட ஷேக் நாம்தார் உசேனை, திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட திருப்பதி மெஜஸ்டிக் என்ற இடத்திற்கு, நேற்று இரவு 8 மணிக்கு அழைத்துச் சென்று, திருடியது குறித்து செயல் விளக்கமாக செய்து காட்டும்படி போலீசார் கூறினர்.
அப்போது, ஷேக்நாம்தார் உசேன் ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்த டூவீலரில் இருந்த கத்தியை எடுத்து, ேபாலீஸ் எஸ்ஐ உள்பட 3 போலீசாரை கை, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடினான். இதனால், இடது கையில் காயமடைந்த எஸ்ஐ வினோத், தான் வைத்திருந்த துப்பாக்கியால் குற்றவாளியை வலது கால் முட்டிக்கு கீழ் சுட்டு மடக்கிப் பிடித்தார். ஷேக் நாம்தார் உசேன் கத்தியால் குத்தியதில், எஸ்ஐ வினோத், தலைமை காவலர் ராமசாமி, முதல் நிலை காவலர் விழியரசு ஆகியோருக்கு கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், வலது காலில் குண்டடிபட்ட ஷேக்நாம்தார் உசேன், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.