சென்னை : தமிழ்நாட்டில் ரூ.210 கோடியில் தொழில் மற்றும் தளவாட பூங்கா அமைக்க இருப்பதாக பனட்டோனி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வணிக ரியல் எஸ்டேட் நிறுவனமான பனட்டோனி குழுமத்தின் இந்திய பிரிவு தொழில் விரிவாக்கம் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 25 ஏக்கர் பரப்பளவில் தொழில் மற்றும் தளவாட பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனம் செயல்படுத்தும் 2வது திட்டம் இதுவாகும்.
ஏற்கனவே இந்த நிறுவனம் டெல்லியில் என்சிஆர் பகுதியில் 2.5 லட்சம் சதுர அடியில் தொழில் பூங்காவை அமைத்து வருகிறது. அதிக திறன் கொண்ட கிடங்குகள் அமைத்து முதல்நிலை நகரங்களில் வலுவான இடத்தை தக்க வைக்கும் நிறுவனத்தின் இலக்கை எட்டுவதற்காக ஓசூர் சந்தையில் நுழைந்துள்ளது. புதிய தொழிற் பூங்கா 5.5 லட்சம் சதுர அடியில் அமைய உள்ளது. இதனிடையே சில மாதங்களில் கட்டுமான பணிகள் துவங்கும் என்று பனட்டோனி இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சந்தீப் சந்தா தெரிவித்துள்ளார்.