ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை 4 மணி அளவில், கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற சரக்கு லாரி மீது மோதியது. இதில் அந்த லாரி மற்றொரு லாரி மீது ேமாதியது. அது மற்றொரு லாரி மீது மோதியது. தேசிய நெடுஞ்சாலை என்பதால், கார்கள் மற்றும் அரசு பஸ் என அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. இதில் 7 கார்கள், 3 லாரிகள், ஒரு அரசு பஸ் விபத்தில் சிக்கின. இதில் 5 கார்கள் அப்பளம் போல் நொறுங்கியது. 2 கார்களின் பின்பகுதி சேதமானது.
மேலும், 2 லாரிகளின் முன்பகுதி கண்ணாடி மற்றும் விளக்குகள் உடைந்து நொறுங்கின. அதே போல், அரசு பஸ்சின் முன் பகுதி பலத்த சேதமானது. விபத்து நடந்த பகுதியில், சாலை முழுவதும் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. இதில் ஒரே காரில் சென்ற கோவையை சேர்ந்த ஆயில் மில் அதிபர் வெங்கடேஷ் (33), அவரது நண்பர் அரவிந்த் (30), ஊழியர்கள் தஞ்சாவூரை சேர்ந்த துரை (24), பழனியை சேர்ந்த கார்த்திக்ராஜா (26) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.
மற்றொரு காரில் சென்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த வேல்விழி(65), அவரது மகன் பூபேஷ், டிரைவர் ரவி(55) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். மொத்தம் 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், டிரைவர் ரவி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.