காசா: ஹமாசால் 326 நாட்களாக பணயக்கைதியாக இருந்த இஸ்ரேல் பிரஜை சுரங்கப்பாதையில் மீட்கப்பட்டார். காசாவில் தேடுதல் வேட்டை தொடர்கிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய நிலையில், 250க்கும் இஸ்ரேல் மக்களை ஹமாஸ் அமைப்பினர் கடத்தினர். அவர்களை பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு, தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் படையினரும் நூற்றுக் கணக்கான மக்களை கொன்று வருகின்றனர். இதுவரை 40,000 பாலஸ்தீனயர்கள் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டனர்.
காசாவில் வசித்து வந்த 23 லட்சம் பேரில் 90% பேர் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போதைய நிலையில் ஹமாஸ் குழுவால் 108 இஸ்ரேல் பணயக்கைதிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்று இஸ்ரேலிய உளவுத்துறை கூறுகிறது. இந்நிலையில் இஸ்ரேலியப் படைகளின் அதிரடி நடவடிக்கையால் காசாவில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ேதடுதல் வேட்டை நடந்தது.
அங்கிருந்த 52 வயதான கைத் ஃபர்ஹான் அல்காடி என்ற இஸ்ரேல் பிரஜையை அந்நாட்டு படையினர் உயிருடன் மீட்டனர். கிட்டத்தட்ட 326 நாட்கள் சிறைபிடிக்கப்பட்டிருந்த அவர், தற்போது மீட்கப்பட்டதால் இஸ்ரேல் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.