சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது வழக்கமான மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டு வருகிறார்.
அவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினார். மேலும் தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயகாந்துக்குக்கு திடீரென இருமல், சளி தொல்லை ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்ககள் பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் அவர் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதித்துத் சிகிச்சை பெற அறிவுறுத்தினர். அதன் பேரில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக தான் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் குணமடைந்து வருவதையடுத்து அவர் இன்று வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.