தாம்பரம்: தாம்பரம் அருகே தனியார் வங்கியின் 2வது மாடியின் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்து காவலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (64). இவர், சிட்லபாக்கம் ராகவேந்திரா சாலையில் உள்ள தனியார் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சோமசுந்தரம், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது பலத்த காற்று வீசியது.
அப்போது வங்கி கட்டிடத்தின் 2வது தளத்தில் சமீபத்தில் கட்டப்பட்டிருந்த கைப்பிடிச்சுவர் தரமற்று இருந்ததால் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் மேல இருந்து கீழே சரிந்து விழுந்தது. இதில், பணியில் இருந்த காவலாளி சிக்கி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.